மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியதை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திவிட்டதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைக்கிறது. உண்மையில் டி.ஆர்.பாலு பேசியது என்ன? - மக்களவை சலசலப்பையும் பின்னணியையும் சற்றே விரைவாகப் பார்ப்போம்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை இயற்கைப் பேரிடர் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து திமுக, மதிமுக உறுப்பினர்கள் பேசினர். அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், “மாநில பேரிடர் நிதியில் தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனப் பதிலளித்தார். அதற்கு டி.ஆர்.பாலு, “மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றார். மேலும், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நாங்களும் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை“ எனப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “நீங்கள் தேவையில்லாததைப் பேசுகிறீர்கள்” என குற்றம்சாட்டினார். இதனால், கோபமடைந்த டி.ஆர்.பாலு, “உங்களுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வி. அதனால், நீங்கள் உட்காருங்கள். நீங்கள் அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லை. மக்களவை உறுப்பினராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்” எனக் கடுமையாகப் பேசினார்.
இதனால், பட்டியலினத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரை அவமரியாதை செய்துவிட்டதாக பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘திமுக கட்சியே தகுதியற்ற கட்சி’, ’காங்கிரஸ் தகுதியற்ற கட்சி’ என பாஜகவினர் கோஷமிட்டனர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. பின், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில், “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி அவமானகரமான கருத்து தெரிவிப்பது டிஆர்.பாலுவுக்கு இது முதல் முறையல்ல. சமூக நீதியின் உண்மையான காவலனான பாஜக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளது.
பல தசாப்தங்களாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தும் திமுகவால் பட்டியலினத்தவர்களை அமைச்சராக்க முடியவில்லை. டி.ஆர்.பாலு போன்ற திமிர் பிடித்தவரால் மட்டுமே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும். இதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். சமூக நீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை" என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்திருக்கும் டி.ஆர்.பாலு, ”தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படவில்லை என ஆ.ராசா மக்களவையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எல்.முருகன் குறிப்பிட்டு மாநில பேரிடர் நிவாரணம் நிதி குறித்து பேசினார். நாங்கள் கேட்பது வேறு. அவர் கூறுவது வேறு. அவர் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறார். அதனால்தான் கூறினேன் அன்ஃபிட் (UNFIT) என்று.
ஆனால், தலித் அமைச்சரை அன்ஃபிட் என்று கூறியதாக அதைத் திரித்து பரப்பக் கூடாது. எல்.முருகன் தலித் என்றால் ஆ.ராசாவும் தலித் தானே. ஆனால், அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், அவமதித்துவிட்டேன் என வேறு ஒரு கற்பிதங்களைப் புகுத்த பாஜக நினைக்கிறார்கள்.
தேர்தல் நெருங்குவதால் பிரச்சினையைப் பெரிதாக்க இப்படியான வியூகங்களை பாஜக கையிலெடுத்துள்ளது. ஆனால், நான் அப்படி எதுவும் பேசவில்லை” என முற்றுப்புள்ளி வைத்தார் டி.ஆர்.பாலு.
ஏற்கெனவே, திமுக மீது சாதி ரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக எம்.பி.டி.ஆர்.பாலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago