புதுடெல்லி: "பிஸ்கெட்டை நாயின் உரிமையாளரிடம் கொடுத்ததும், அவரிடமிருந்து அது பிஸ்கெட்டை சாப்பிட்டது" என்று வைரல் வீடியோ குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் நடந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ராகுல் காந்தி பிஸ்கெட் வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த பிஸ்கெட் வீடியோ விவகாரம் குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாயையும் அதன் உரிமையாளரையும் அழைத்தேன். அந்த நாய் பதற்றத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தது. நான் அதற்கு பிஸ்கெட் ஊட்டியபோது அது பயந்து விட்டது. அதனால், அந்தப் பிஸ்கெட்டை அதன் உரிமையாளரிடம் கொடுத்தேன். பின்னர் நாய் அதன் உரிமையாளரின் கையிலிருந்து பிஸ்கெட்டை சாப்பிட்டது. இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை" என்றார்.
தொடர்ந்து நாயின் உரிமையாளர் காங்கிரஸ் தொண்டர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு பதில் அளித்த ராகுல், "இல்லை, அவர் எங்கிருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்? நாய்கள் மீதான பாஜகவின் மோகம் எனக்குப் புரியவில்லை" என்று கூறினார்.
முன்னதாக, யாத்திரையின்போது நாய்க்கு ராகுல் காந்தி பிஸ்கெட் வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி வளர்ப்பு நாய் ஒன்றுடன் உள்ளார். அதற்கு கொடுப்பதற்காக அருகில் இருக்கும் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை கேட்கிறார். தொடர்ந்து நாய்க்கு பிஸ்கெட் ஊட்டுகிறார். அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள், ராகுல் காந்தியுடன் பேச வருகின்றனர். நாய்க்கு பிஸ்கெட் ஊட்டிக் கொண்டே ராகுல் அவர்களுடன் பேசுகிறார். அப்போது நாய்க்கு வழங்கிய பிஸ்கெட் ஒன்றை அது சாப்பிட மறுக்க, உடனடியாக ராகுல் காந்தி அதனை தன்னிடம் பேசிய ஆதரவாளருக்கு வழங்குகிறார்.
» கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான லாவலின் வழக்கில் மே மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. அத்துடன் காங்கிரஸ் எம்.பி. கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை தவறாக நடத்துவதாக ராகுல் மீது பலர் குற்றம்சாட்டினர். என்றாலும் சிலர் அந்த நாய் ராகுலிடம் பேசிய ஆதரவாளருடையது, கொஞ்சம் நேரம் கழித்து நாய்க்கு கொடுப்பதற்காக பிஸ்கெட்டை அந்த ஆதரவாளரிடம் ராகுல் காந்தி கொடுத்தார் என்று ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
நாய்க்கு பிஸ்கெட் வழங்கும் வீடியோ இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், ராகுல் காந்தி நாய்க்கு பிஸ்கெட் கொடுக்கும்போது அது தயங்கவே, பிஸ்கெட்டை அருகில் இருந்த நாயின் உரிமையாளரிடம் ராகுல் கொடுக்கிறார். பின்னர் நாய் உரிமையாளரின் கையில் இருந்து பிஸ்கெட்டை வாங்கி சாப்பிடுறது.
என்றாலும், இந்தச் சம்பவம் குறித்த மற்றொரு வீடியோவை பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ராகுல் காந்தி நாய்க்கு பிஸ்கெட் ஊட்டும்போது அது சாப்பிடவில்லை. உடனே அதே பிஸ்கெட்டை அவர் அருகில் இருக்கும் காங்கிரஸ் ஆதரவாளரிடம் கொடுக்கிறார். அத்துடன் வீடியோ முடிந்து விடுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்று அதில் இல்லை.
இந்த வீடியோவை பகிர்ந்திந்த அமித் மாளவியா, பூத் ஏஜெண்ட்கள் குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சையும், ராகுலின் செயலையும் ஒப்பிட்டிருந்தார். அப்பதிவில், "சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பூத் ஏஜெண்ட்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இப்போது ராகுல் காந்தி நாய்க்கு பிஸ்கெட் வழங்குகிறார். அது சாப்பிட மறுத்ததும் அந்தப் பிஸ்கெட்டை காங்கிரஸ் ஆதரவாளருக்கு கொடுக்கிறார்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே, ராகுல் குறித்த வைரல் வீடியோ குறித்து சர்ச்சைக் கருத்து பந்தையத்தில் அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவும் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னை டேக் செய்திருந்த எக்ஸ் பயனர் ஒருவரின் பதிவுக்கு பதில் அளித்திருந்த ஹேமந்த பிஸ்வா, “ராகுல் காந்தி மட்டும் இல்லை, மொத்த குடும்பத்தினராலும் என்னை அந்த பிஸ்கெட்டைச் சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமை மிக்க அசாமி, இந்தியன். நான் அந்த பிஸ்கெட்டைச் சாப்பிட மறுத்தேன், காங்கிரஸில் இருந்து வெளியேறினேன்" என்று தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago