“மம்தா பானர்ஜி ‘இண்டியா’ கூட்டணியில்தான் இருக்கிறார்” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

ராஞ்சி: “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘இண்டியா’ கூட்டணியில்தான் இருக்கிறார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்னும் இந்தக் கூட்டணியில்தான் உறுப்பினர்களாக உள்ளனர்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ’பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தற்போது ஜார்க்கண்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், கும்லாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடி தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் (OBC) எனக் கூறிக் கொள்கிறார். பின்னர் குழப்பமடைகிறார். அதே நேரத்தில் நாட்டில் ஏழைகள், பணக்காரர்கள் என இரண்டு சாதிகள்தான் உள்ளன என்றும் கூறுகிறார். இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 15 சதவீதம் பேர் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் எட்டு சதவீதமாக உள்ளனர்.

நாட்டில் ஓபிசி சமூகத்தினர் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பது குறித்த விவரம் யாருக்குமே தெரியாது. எந்தெந்த சாதிகள் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது ஒவ்வொரு இந்திய மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது. நிச்சயமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

உதாரணமாக, டெல்லியில் உள்ள 90 ஐஏஎஸ்களில் மூவர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரை நீங்கள் காண முடியாது. நாட்டில் உள்ள 100 முன்னணி பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர்கூட ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் இல்லை. அதானி, டாடா, பிர்லா போன்ற பெயர்கள் மட்டுமே கேட்டிருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜார்க்கண்டில், எங்களுடைய அரசு பழங்குடியினருக்கு ஆதரவான அரசாக இருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசு பழங்குடியினருக்கு எதிரானது. பாரத் ஜோடோ நியாய யாத்திரையானது நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிரானது. தற்போது சமூக நீதி, பொருளாதார அநீதி, வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்டவற்றுக்காகவும் போராட வந்துள்ளோம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில்தான் இருக்கிறார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்னும் இந்தக் கூட்டணியில்தான் உறுப்பினர்களாக உள்ளனர். நிதிஷ் குமார் மட்டுமே இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் இணைந்துள்ளார். அவர் வெளியேறியதற்கான காரணங்கள் என்ன என்பதை உங்களால் யூகிக்க முடியும். அது பரவாயில்லை. பிஹாரில் இண்டியா கூட்டணியை சேர்ந்த அனைவரும் இணைந்து போராடுவோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE