‘நாய்க்கும் ஆதரவாளருக்கும் ஒரே பிஸ்கெட்...’ - ராகுல் காந்தி மீது அசாம் முதல்வர் புதிய தாக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வளர்ப்பு நாய் ஒன்றுக்கு பிஸ்கெட் வழங்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அது குறித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா ராகுல் மீது புதிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ராகுல் காந்தி வளர்ப்பு நாய் ஒன்றுடன் உள்ளார். அதற்கு கொடுப்பதற்காக அருகில் இருக்கும் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை கேட்கிறார். தொடர்ந்து நாய்க்கு பிஸ்கெட் ஊட்டுகிறார். அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்கள் ராகுல் காந்தியுடன் பேச வருகின்றனர். நாய்க்கு பிஸ்கெட் ஊட்டிக் கொண்டே ராகுல் அவர்களுடன் பேசுகிறார். அப்போது நாய்க்கு வழங்கிய பிஸ்கெட் ஒன்றை அது சாப்பிட மறுக்க, உடனடியாக ராகுல் காந்தி அதனை தன்னிடம் பேசிய ஆதரவாளருக்கு வழங்குகிறார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டிருந்தாலும், அதல் நாய்க்கு பிஸ்கெட் வழங்கும் காட்சிகள் இல்லை.

ராகுல் காந்தியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் காங்கிரஸ் எம்.பி. கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை தவறாக நடத்துவதாக ராகுல் மீது பலர் குற்றம்சாட்டியுள்ளனர். என்றாலும் சிலர் அந்த நாய் ராகுலிடம் பேசிய ஆதரவாளருடையது, கொஞ்சம் நேரம் கழித்து நாய்க்கு கொடுப்பதற்காக பிஸ்கெட்டை அந்த ஆதரவாளரிடம் ராகுல் காந்தி கொடுத்தார் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அந்த வீடியோ குறித்த தங்களின் பதிவில் அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை டேக் செய்துள்ளனர்.

முன்பு காங்கிரஸில் இருந்த அவர் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஹேமந்த பிஸ்வா, தானும் பிற காங்கிரஸ் தலைவர்களும் நடத்தப்பட்ட விதம் குறித்து ஒரு சம்பவத்தை அடிக்கடி கூறி வந்தார். அவர் கூறுகையில், “நானும் சில காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றோம். அப்போது ராகுல் காந்தியின் வளர்ப்பு நாய் ஒரு தட்டிலுள்ள பிஸ்கெட்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்தத் தட்டில் இருந்தே பிஸ்கெட்கள் சாப்பிட வழங்கப்பட்டன” என்றார். இதனை அவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அப்போது அவர், கட்சியின் முக்கிய பிரச்சினைகளில் ராகுல் காந்தி அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் முதல்வர், ராகுலைத் தாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை.எக்ஸ் பயனர் ஒருவரின் பதிவுக்கு பதில் அளித்துள்ள ஹேமந்த பிஸ்வா, “ராகுல் காந்தி மட்டும் இல்லை, மொத்த குடும்பத்தினராலும் என்னை அந்த பிஸ்கெட்டைச் சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமை மிக்க அசாமி, இந்தியன். நான் அந்த பிஸ்கெட்டைச் சாப்பிட மறுத்தேன், காங்கிரஸில் இருந்து வெளியேறினேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அமித் மாளவியாவும் இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தியை தாக்கியுள்ளார். அவர், “கட்சியின் இளவரசர் கட்சியினரை நாய் போல நடத்தினால் கட்சி விரைவில் அழிந்து போவது இயற்கையே” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE