ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்குவதால் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கிறோம்: மக்களவையில் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசியல் தலைவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த உழைப்பில் வளர்ச்சி அடைவதை நாங்கள்எதிர்க்கவில்லை. வாரிசு அரசியலை மட்டுமே எதிர்க்கிறோம். வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்கள் குறித்தும், அவர்களது வளர்ச்சிகுறித்தும் குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சிறுபான்மையினர் குறித்து அவரது உரையில் குறிப்பிடப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டுகிறார். உங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், இளைஞர், ஏழைகள், விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரை சிறுபான்மையினர் என பிளவுபடுத்துவது ஏன். இந்தநாட்டை இன்னும் எவ்வளவு காலம் துண்டாட முயற்சி செய்வீர்கள்.

எதிர்க்கட்சிகளில் திறமையான தலைவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் முன்னால் வருவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட துணிவு இல்லை. பலர் தொகுதி மாறி போட்டியிட முயற்சிக்கின்றனர். சிலர் மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு செல்ல விரும்புகின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேமக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், வாரிசு அரசியல் பிரச்சினை காரணமாக கட்சியில் இருந்தே விலகிவிட்டார்.

அரசியல் தலைவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த உழைப்பில் வளர்ச்சி அடைவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அமித் ஷா, ராஜ்நாத் சிங் குடும்பங்களுக்கு தனி கட்சி கிடையாது. வாரிசு அரசியல் என்பது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகிறது. அதனால், வாரிசு அரசியலை மட்டுமே எதிர்க்கிறோம்.

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது. ஒரு மகனின்(ராகுல் காந்தி) நலனுக்காக மட்டுமே அந்த கட்சி கவலைப்படுகிறது. நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் குறித்து காங்கிரஸுக்கு அக்கறை இல்லை. ஒரேபொருளை (ராகுல்) சந்தையில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்கிறார்கள். இதனால், அந்த கடை(காங்கிரஸ்) மூடப்படுகிறது.

சுயசார்பு இந்தியா திட்டம், வந்தே பாரத் ரயில், புதிய நாடாளுமன்றம் இது எதுவுமே வேண்டாம் என்று காங்கிரஸ் கூறியது. இவை எல்லாம் மோடியின் சாதனைகள்அல்ல. நமது நாட்டின் சாதனை.இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. பகவான் ராமர் மீண்டும்தனது கூடாரத்துக்கு திரும்பியுள்ளார்.

காங்கிரஸுக்கு 100 ஆண்டு: எங்கள் ஆட்சிக் காலத்தின்ஒட்டுமொத்த சாதனைகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு 100 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த 10 ஆண்டுகள் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி அவ்வாறு செயல்படவில்லை.

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுகள் மூலம்எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் நீண்ட காலம் நிலைத்திருக்க அவர்கள் முடிவு செய்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.

‘இந்தியர்கள் சோம்பேறிகள், மெதுவாகவே வேலை செய்வார்கள், அவர்களுக்கு போதிய அறிவுகிடையாது’ என்று நேரு நினைத்தார். இந்திரா காந்தியும் அதே கருத்துகளை கொண்டிருந்தார். இந்திய மக்களின் திறமை, வேகத்தை காங்கிரஸ் தவறாக மதிப்பிட்டது. இதுவே காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம். இப்போது பாஜக ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க அஸ்திவாரம் அமைத்து வருகிறோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் தற்போது 5-வது இடத்தில் இருக்கிறோம். பாஜகவின் 3-வது ஆட்சிக் காலத்தில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம்.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். இதை நான்கூறவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜகமட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும். எங்களது 3-வது ஆட்சிக்காலத்தில், அடுத்த 1,000 ஆண்டுகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்.

ஊழல்வாதிகளுக்கு சிறை: பணப் பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத் துறை 5,000 கோடி மதிப்பிலான சொத்துகளை மட்டுமே முடக்கியது. பாஜகஆட்சியில் ஒரு லட்சம் கோடிமதிப்பு சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. நாட்டின்வளம், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

எங்களை பொருத்தவரை நாட்டின் நலனுக்கு முதலிடம் அளித்து வருகிறோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE