கோவாவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

பனாஜி: கோவா மாநிலம் பனாஜியில் இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இது, நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி தொடர்பான நிகழ்வாக இருக்கும். இதில் 17 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 900-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டால்களை அமைக்க உள்ளன. இந்நிகழ்வை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் வட்டமேசை கூட்டத்தில், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவித்தல் மற்றும் அவற்றை எரிசக்தி வலையமைப்பில் ஒருங்கிணைத்தல் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

கோவா பயணத்தின்போது, அங்கு அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.1,330 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தெற்கு கோவாவில் உள்ள பேடுல் கிராமத்தில் ஓஎன்ஜிசி-யின் சர்வைவல் மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இதுதவிர, வளர்ந்த இந்தியா, வளர்ந்த கோவா 2047 தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் அரசுப் பணிகளுக்கு தேர்வாகி உள்ள 1,930 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE