இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஷிகாப் தங்கல் ராமர் கோயிலுக்கு ஆதரவு

By செய்திப்பிரிவு

கோழிக்கோடு: கேரளாவில் ஆளும் இடதுசாரி (எல்டிஎப்) அரசில் இந்திய தேசியலீக் (ஐஎன்எல்) அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் (யுடிஎப்) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி மலப்புரத்தில் ஐயுஎம்எல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் பனக்காடு சயத் சாதிக் அலி ஷிகாப் தங்கல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசிய வீடியோ கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது. அந்த கட்சிக் கூட்டத்தில் ஷிகாப் தங்கல் பேசியிருப்பதாவது:

ராமர் கோயில் கட்டுவதும், பாபர் மசூதிக்குப் பதில் வேறு இடத்தில் மசூதி கட்டப்படுவதும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு சிறந்த உதாரணங்கள். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராமர் கோயில் என்பது நிதர்சனமாக உண்மை. அதில் இருந்து யாரும்பின்வாங்க முடியாது. இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ளமக்களின் தேவை என்ன என்பதைகணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் (முஸ்லிம்கள்) எதிர்ப்பு தெரிவிக்க தேவையில்லை. அதுவும், உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படிதான் ராமர் கோயிலும், மசூதியும் கட்டப்படுகின்றன.

கர சேவகர்கள் பாபர் மசூதியை இடித்தார்கள் என்பதுஉண்மைதான். அப்போது கேரளாவில் உள்ள முஸ்லிம்கள் அந்த சூழ்நிலையை மிகுந்த சகிப்புத் தன்மையுடன் கையாண்டனர். அந்தச் சூழ்நிலையில் கேரளாவில் உணர்ச்சிப்பூர்வமான, துடிப்புள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக விளங்கினர். இவ்வாறு ஷிகாப் தங்கல் பேசியுள்ளார்.

இதற்கு ஐஎன்எல் மாநில உறுப்பினர் என்.கே.அப்துல் அசீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். அவர் கூறுகையில், ‘‘பாபர் மசூதிஇடிக்கப்பட்டதை மதச்சார்பற்றகட்சிகள் மற்றும் பெரும்பான்மையான மக்கள் எதிர்த்தார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வரவேற்கும் ஐயுஎம்எல் எப்படி தங்களை சிறுபான்மை முஸ்லிம்களின் காவலனாக கூறிக் கொள்ள முடியும். ஆன்மிக இந்துயிசம் வேறு, ஆர்எஸ்எஸ் அரசியல் இந்துத்துவா வேறு. காந்தியின் ராம ராஜ்ஜியம் வேறு; ஆர்எஸ்எஸ் ராம ராஜ்ஜியம் வேறு’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE