“400+ இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்” - பிரதமர் மோடி | எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன்

By எல்லுச்சாமி கார்த்திக்

புதுடெல்லி: எதிர்வரும் தேர்தலில் 400+ இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி, தனது நாடாளுமன்ற உரையில் பேசி இருந்தார். ‘கனவு காணும் உரிமை பிரதமருக்கு உள்ளது. ஆனால், எதார்த்த நிலை வேறாக உள்ளது’ என அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றியுள்ளன. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலுரை தரும் வகையில் திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடி பேசினார். சுமார் 1 மணி நேரம் 39 நிமிடங்கள் அவர் பேசி இருந்தார். அதில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் நேருவையும் விமர்சித்தார்.

பிரதமர் மோடி உரை: “எதிர்வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களையும், பாஜக 370 இடங்களிலும் வெல்லும். தேசத்தின் மனநிலையை கணித்து இதை சொல்கிறேன். இன்னும் 100 - 125 நாட்கள் தான் உள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவும் இதையேதான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைக்கும் ஆட்சி ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்கும்.

எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் மற்றும் அவர்களது பேச்சுகள் அனைத்தும் அவர்களை அங்கேயே தான் இருக்க செய்யும் என நம்புகிறேன். கூடிய விரைவில் அவை நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மட்டும் தான் அவர்கள் பார்க்க வேண்டி இருக்கும். உங்களது தலைவர்கள் மாறினாலும் நாட்டு மக்களை ஏமாற்றும் அந்த போக்கு மட்டும் மாறவே இல்லை.

மீண்டும் மீண்டும் ஒரே நபரையே முன்னிறுத்துவது தான் காங்கிரஸ் கட்சியின் அழிவுப் பாதைக்கு வழிவகுத்துள்ளது. நாட்டை கொள்ளையடிக்க விடமாட்டேன். கொள்ளையடித்த பணத்தை திரும்பப் பெறாமல் விடமாட்டேன்” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் ரியாக்‌ஷன்: பிரதமரின் இந்த உரைக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

பினோய் விஸ்வம், மாநிலங்களவை உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி: “பிரதமர் மோடியின் பேச்சை வைத்து பார்க்கும்போது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை என உறுதியாக தெரிகிறது. அவர் அச்சத்தில் உள்ளார். அவரது அரசின் செயல்பாடு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மக்கள் தங்களுக்கு தேர்தலில் தக்க தீர்ப்பு வழங்குவார்கள் என அஞ்சுகிறார்” என தெரிவித்தார். பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவை உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சி: “இந்த நாட்டில் அனைவருக்கும் கனவு காணும் உரிமை உள்ளது. அந்த வகையில் பிரதமரும் 400 அல்லது 500 தொகுதிகளில் வெற்றி என கனவு காணலாம். ஆனால், எதார்த்தம் வேறு. தனி ஒருவரின் கனவு சார்ந்த கட்டளைக்கு கவனம் கொடுக்காமல் தங்களது ஆட்சியாளர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாக்கூர், மக்களவை உறுப்பினர், காங்கிரஸ் கட்சி: “முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தியை தொடாமல் பிரதமர் மோடியால் பேசவே முடியாது. 370 தொகுதிகளில் அவர் வெற்றி பெறாவிட்டால் அவர் பிரதமராக பதவியேற்க மாட்டாரா? அதற்கான உறுதிமொழியை அவர் கொடுப்பாரா? இந்த மாதிரியான தேர்தல் சார்ந்த பேச்சை மக்களவையில் பேசலாம். ஆனால், மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். 2004-லும் இப்படித்தான் நடந்தது” என தெரிவித்துள்ளார்.

டேனிஷ் அலி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி: “வாக்கு எந்திரங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக பிரதமர் மோடி இப்படி பேசி இருக்கலாம். அந்த பதவியின் கண்ணியத்தையாவது அவர் காப்பாற்ற வேண்டும். 2024-ல் அவருடைய கர்வம் தகர்க்கப்படும்” என தெரிவித்தார். பெண்களுக்கு மதிப்பளிக்காத வகையில் பாஜக-வினர் பேசி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE