பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

அப்போது அவர், பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அவர்கூறும்போது, ‘‘வரும் மக்களைவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், 2027-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். அந்த இலக்கை எட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும்’’ என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கரோனா தொற்றால் நெருக்கடி ஏற்பட்ட போதும் மத்திய அரசின் கொள்கைகளால், நாடு பொருளாதார சரிவிலிருந்து விரைவிலேயே மீண்டது. தவிர, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும் மாறியது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.

தற்போது ஏஐ தொழில்நுட்ப சார்ந்து அதிக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் அத்தகைய தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது. மனிதர்களின் தலையீடு இல்லாமல் ஏஐ தொழில்நுட்பம் இயங்காது. ஏஐ சார்ந்த முதலீட்டால், பல்வேறு தளங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE