அசாமில் நான்குவழி சாலைகள், பாலங்கள் உட்பட ரூ.11,600 கோடி திட்டம் தொடங்கினார் மோடி

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாமில் ரூ.11,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர்மோடி தொடங்கி வைத்தார். அசாமில் குவாஹாட்டி நகரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது ரூ.498 கோடியில் காமாக்யா கோயில் வளாக விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தடத்தின் ஒருபகுதியாக ரூ.3,400 கோடி மதிப்பில் 38 பாலங்கள் உட்பட 43 சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். டோலாபாரி - ஜமுகுரி மற்றும் பிஸ்வநாத் சாரியாலி - கோஹ்பூர் என 2 நான்குவழி சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சந்திரபூரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கத்தை, ‘பிபா’ தரத்துக்கு இணையான கால்பந்து மைதானமாக மேம்படுத்தஅடிக்கல் நாட்டினார். குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி, கரீம்கஞ்ச் மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சி திட்டபணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்தமாக அசாம் முழுவதும்ரூ.11,600 கோடியிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: சமீபத்தில் அயோத்தி பால ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றேன். தற்போது காமாக்யா கோயில் விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

நமது வழிபாட்டுத் தலங்கள், நமது அடையாளங்கள். அந்நியர் ஆட்சியில் அவை அழிவை சந்தித்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்அவற்றை சீரமைக்க அப்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்குவந்த பிறகு, நமது வழிபாட்டுதலங்கள் மீட்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியஅரசு அமல்படுத்திய பல்வேறு திட்டங்களால் நமது நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது. அதேநேரம் நமது பாரம்பரியமும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

மத்தியிலும் அசாமிலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால் அசாம் மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் ஐஐடி எய்ம்ஸ், ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பெருநகரங்களில் மட்டுமே இருந்தன. பாஜக ஆட்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயர் கல்வி நிறுவனங்கள், உயர்தரமான மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மோடியின் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்பதை மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கடந்த 2004 முதல் 2014 வரையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்தமாக நாட்டின் உள்கட்டமைப்புக்காக ரூ.12 லட்சம் கோடிமட்டுமே ஒதுக்கப்பட்டது. சமீபத்தில்தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக ஒரு நிதி ஆண்டில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE