“புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள தவறிவிட்டனர்” - பிரதமர் மோடி @ அசாம்

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: “சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை உணரவில்லை; அரசியல் காரணங்களுக்காக தங்களின் சொந்த கலாச்சாரம் குறித்து வெட்கப்படும் போக்கை உருவாக்கி விட்டார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.11,600 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் கூறியதாவது: "தங்களின் கடந்த காலத்தை அழித்து விட்டு எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. மத்திய அரசால் ரூ.498 கோடி ரூபாயில் உருவாக்கப்படும் காமாக்யா கோயில் நடைபாதைத் திட்டம் நிறைவடைந்ததும், சக்தி பீடத்தை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இது வடகிழக்கின் நுழைவாயிலாக மாறும். ஆயிரக்கணக்கான ஆண்டுகால சவால்கள் இருந்த போதிலும் இவை அனைத்தும் நமது கலாச்சாரங்கள். நாம் இதை எவ்வாறு பாதுகாத்து வைத்திருகிறோம். நமது வலுவான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த சின்னங்களில் பல இன்று இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன.

சுதந்திரத்துக்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்களால் இந்த நம்பிக்கைக்கு உரிய இடங்களின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் அவற்றை புறக்கணித்தனர். அரசியல் ஆதாயத்துக்காக, தங்களின் சொந்த கலாச்சாரம் மற்றும் கடந்த காலம் குறித்து வெட்கப்படும் ஒரு போக்கை உருவாக்கினர். தங்களின் கடந்த காலத்தை மறந்து, அதனை ஒழித்து அதன் வேர்களை அழித்த எந்த ஒரு நாடும் வளர்ச்சியடையாது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் இரட்டை இயந்திர அரசின் கொள்கை நமது வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தை பாதுக்காப்பது தான். அதற்கு அசாமே உதாரணம். இது நம்பிக்கைகள், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை நவீனத்துடன் இணைந்த ஒரு இடம்.

இன்று தெற்காசியாவுக்கு இணையாக அசாமும் வடகிழக்கும் வளர்ச்சியடைந்திருப்பதை இளைஞர்கள் பார்க்க விரும்புகிறார்கள். உங்களுடைய கனவே மோடியின் தீர்மானம். உங்களுடைய கனவை நிறைவேற்ற நான் எதையும் செய்வேன். இது மோடியின் உத்திரவாதம். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் வெகுவாக அமைதி திரும்பியுள்ளது. 7,000 பேர் ஆயுதங்களைத் துறந்து சராசரி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

அமைதிக்காக 10-க்கும் அதிகமான முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒருகால கட்டத்தில் கட்சிக்காக அசாம் மாநிலத்தில் பணியாற்றியுள்ளேன். அப்போது குவாஹாட்டியில் சாலை மறியல், குண்டு வெடிப்புகளை நேரில் பார்த்துள்ளேன். ஆனால் அவை எல்லாம் இன்று பழைய கதைகளாகியுள்ளன.

மாநிலத்தின் பல பிராந்தியங்கள் மற்றும் பகுதிகளில் இருந்து ஆயுத படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 (AFSPA) திரும்ப பெறப்பட்டுள்ளது. கடந்த தசாப்தங்களில் வடகிழக்குக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை மேம்படுத்தும் வகையில் நாங்கள் புதிய திட்டங்களைத் தொடங்க உள்ளோம். அதனால் தான் இந்தாண்டு பட்ஜெட்டில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாமும், வடகிழக்கும் ஏராளமான வாய்ப்புகள் பெறும்.

கடந்த பத்து ஆண்டுகளில் பிராந்தியத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளது" இவ்வாறு பிரதமர் பேசினார். தொடர்ந்து, "இதற்கு முன்பு அசாமில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கூட இவ்வாறு செய்யப்படவில்லை" என்று அசாமிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்-ன் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸைத் தாக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE