தெலங்கானா அரசு நிகழ்ச்சிக்கு பிரியங்கா காந்தியை அழைப்பது ஏன்? - காங்கிரஸாருக்கு எம்எல்சி கவிதா கேள்வி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘‘அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, பிரியங்கா காந்தியை அழைப்பது ஏன்?’’ என தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலவை உறுப்பினர் கவிதா பேசியதாவது: குழந்தைதனமாக, காங்கிரஸார் இழைக்கும் தவறுகளை நாங்கள் 100 நாட்கள் பொறுத்திருந்தோம். புதிய அரசு தற்போதைய சூழலை புரிந்து கொள்ள கால அவகாசமும் கொடுத்தோம். ஆனால், அவர்கள் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இன்னமும் பலவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர்.

பெண்களுக்கு ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை பிரியங்கா காந்தியை அழைத்து வந்து கொடுக்கவிருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தி இதுவரை ஒரு ஊராட்சி மன்ற தலைவராக கூட போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவருக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்ன தகுதி இருப்பதாக காங்கிரஸார் நினைக்கிறார்கள் ?

பிரியங்கா காந்தியை அழைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்தினால் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களை அரசு செலவில்ஹைதராபாத்தில் பாதுகாக்கிறார்கள். தினமும் நான் மக்களை சந்திப்பேன் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். அதன்படி ஒரே ஒரு நாள் மட்டுமே மக்களை அவர் சந்தித்தார். அதன் பின்னர் அந்த வாக்குறுதியையே மறந்து விட்டார். ஆதலால் அவரை ‘யூ டர்ன்’ முதல்வர் என்றும் அழைக்கலாம். இவ்வாறு கவிதாகடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE