சிவ சேனா மூத்த தலைவரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கைது - மகாராஷ்டிராவில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தலைவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட்டுக்கும், சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) மூத்த தலைவர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணபதி கெய்க்வாட் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிலத்தை மகேஷ் கெய்க்வாட் ஆக்கிரமித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கணபதி கெய்க்வாட்டின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவர் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கணபதி கெய்க்வாட், “ஆமாம். நான்தான் சுட்டேன். அதற்காக நான் வருந்தவில்லை. காவல் நிலையத்தில் என் கண் முன்னால் எனது மகன் தாக்கப்பட்டான். நான் வேறு என்ன செய்ய முடியும்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கிரிமினல்களை ஊக்குவிக்கிறார். மகாராஷ்டிராவை கிரிமினல்களின் ராஜ்ஜியமாக மாற்ற முயல்கிறார். முதலில் அவர் உத்தவ் தாக்கரேவின் முதுகில் குத்தினார். பின்னர், பாஜகவின் முதுகிலும் குத்தினார். அவர் என்னிடம் பல கோடி ரூபாய்க்கு கடன்பட்டுள்ளார். மகாராஷ்டிரா நன்றாக நிர்வகிக்கப்பட வேண்டுமானால் ஷிண்டே பதவி விலக வேண்டும். தேவேந்திர பட்னவிஸ்க்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதனை எனது தாழ்மையான வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருக்கும் வரை மகாராஷ்டிராவில் கிரிமினல்கள்தான் பிறப்பார்கள். ஒரு நல்ல மனிதனாகிய என்னையே அவர் கிரிமினலாக ஆக்கிவிட்டார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற எனது மகனை மகேஷ் கெய்க்வாட்டின் ஆட்கள் என் கண் முன்பாகவே அடித்தார்கள். அதன் காரணமாகவே நான் துப்பாக்கியால் சுட்டேன். காவல் நிலையத்தில் 5 ரவுண்டுகள் வரை சுட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கொலை முயற்சி வழக்கில் கணபதி கெய்க்வாட் மற்றும் இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சிவ சேனா(ஷிண்டே பிரிவு) தலைவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, “காவல் நிலையத்துக்குள்ளேயே பாஜக எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கமானவர். மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தாக்கியவர், தாக்கப்பட்டவர் என இரண்டு தரப்பின் கட்சிகளும் ஆளும் கட்சிகளாக உள்ளன. சட்டத்தைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இரட்டை இன்ஜின் ஆட்சியின் இரண்டு இன்ஜின்களும் பழுதடைந்துவிட்டன” என விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE