எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டிய விவகாரம்: கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் குழு கேஜ்ரிவாலின்அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்றுள்ளது.

குற்றப்பிரிவு போலீஸாரின் நோட்டீஸினை ஏற்று அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போலீஸார் எந்த நோட்டீஸையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் வரும் போதே ஊடகத்தினரை அழைத்து வந்தனர். காவல்துறை அவதூறு பரப்பவே வந்ததது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே இந்த நோட்டீஸை முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க குற்றப்பிரிவு போலீஸார் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் அதிஷி வீடுகளுக்கு குற்றப் பிரிவு குழு வெள்ளிக்கிழமை சென்றது. ஆனால் அந்த இரண்டு தலைவர்களும் நோட்டீஸை ஏற்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் குழு மீண்டும் சனிக்கிழமை அவர்களின் வீடுகளுக்குச் செல்லும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

புகார் பின்னணி: ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “சமீபத்தில் அவர்கள் (பாஜகவினர்) எங்களுடைய டெல்லி எம்எல்ஏ.,க்கள் 7 பேரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, இன்னும் சில நாட்களில் நாங்கள் கேஜ்ரிவாலை கைது செய்து விடுவோம். அதன் பின்னர் எம்எல்ஏ.,க்களை பிரிப்போம். 21 எம்எல்ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மற்றவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பின்னர் டெல்லியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்ப்போம். நீங்களும் வரலாம். ரூ. 25 கோடி வழங்கப்படும். பாஜக சார்பில் தேர்தலிலும் போட்டியிடலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு: இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷியும் இதே குற்றச்சாட்டினை வைத்தார். அவர் கூறுகையில், “பாஜக தனது தாமரை 2.0 ஆபரேஷனைத் தொடங்கி, ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க சதி செய்கின்றது. ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்களை அழைத்துப் பேசியுள்ள பாஜகவினர் அரவிந்த் கேஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார். 21 எம்எல்ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசு கவிழ்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை மறுத்துள்ளனர். ஆபரேஷன் தாமரை என்பது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களில் ஆட்சிக்கு வர பாஜக கையாண்ட தந்திரம். மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் இதற்கான உதாரணங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான பாஜக குழு ஜன.30-ம் தேதி டெல்லி காவல் துறை தலைவரைச் சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE