இஸ்ரேலில் ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் வேலை செய்ய உயிருக்கு பயப்படாமல் வரிசையில் நிற்கும் பல மாநில கட்டிட தொழிலாளர்கள்

By செய்திப்பிரிவு

ரோதக்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், காசா மீது போர் தொடுத்துள்ளது இஸ்ரேல். மேலும், இஸ்ரேலில் பணியாற்றிய பாலஸ்தீன தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டது. இதனால். அங்கு கட்டிடதொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய தொழிலாளர்களை இஸ்ரேல் தேர்வு செய்கிறது. இதற்கான ஆட்கள் தேர்வு ஹரியாணாவின் ரோதக் நகரில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் ஹரியாணா, பஞ்சாப், உ.பி, பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் பணியாற்றுவது அபாயம் என தெரிந்தும், உயிருக்கு பயப்படாமல் மாதம் ரூ.1.4 லட்சம் சம்பளம் என்பதால் அங்கு துணிந்து செல்ல பட்டதாரிகள் உட்பட பலர் போட்டியிட்டனர். அவர்கள் சிமென்ட் கலவை பூசுதல், கம்பி கட்டுதல், டைல்ஸ் ஓட்டுதல், தச்சுவேலை உட்பட கட்டிட தொழில்கள் தொடர்பான திறன் பரிசோதனையில் பங்கேற்றனர். இந்த தேர்வு முறையில் 400-க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆட்கள் தேர்வில் பங்கேற்ற யாதவ் என்ற பட்டதாரி கூறுகையில், என்னைப் போன்ற அதிக அனுபவம் இல்லாத தொழிலாளர்களுக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு 3சகோதரிகள் உள்ளனர். அவர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். என் தந்தை ஏழை விவசாயி. அதனால் இஸ்ரேல் செல்ல முடிவெடுத்தேன். வாழ்க்கை கடவுள் கையில் உள்ளது’’ என்றார்.

லக்னோவைச் சேர்ந்த கட்டிடதொழிலாளி முகேஷ் குமார் ராவத்கூறுகையில், ‘‘இங்கு ரூ.15,000 ஆயிரம்தான் சம்பாதிக்க முடிகிறது. இஸ்ரேலில் 2 மாதங்கள் பணியாற்றினாலும் ரூ.2.5 லட்சத் துக்கு மேல் கிடைக்கும். நிலைமை விரைவில் மாறும். இங்கு 15 ஆண்டுகள் பணியாற்றியும், என்னால் என் குழந்தைகளின் பள்ளி படிப்பு கட்டணத்தை குறித்த நேரத்தில் செலுத்த முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தால் எதுவும் கிடைக்காது. அதனால் துணிந்து இஸ்ரேல் செல்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE