பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன்? - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சி வரம்பை உயர்த்துவது போன்ற ஜனரஞ்சக அறிவிப்புகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், மக்களுக்கு ஆதரவான திட்டங்களை அறிவித்தது மட்டுமல்ல, அவற்றை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மத்திய அரசின் கொள்கைகளால் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஒவ்வொருவரும் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று.

பேச்சுக்கு சொல்வதாக இருந்தால், மக்களுக்குத் திட்டங்களை வழங்கவே அரசு செயல்படுகிறது என்ற நம்பிக்கை ஏற்படும்போது, அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடையும் போது, நம்பிக்கை ஏற்படும். முதல்முறையும் இரண்டாம் முறையும் மக்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள். மூன்றாவது முறையும் அவர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சமூக நலத்திட்டங்களுக்கு மிகப் பெரிய தொகையை செலவிடுவதில் எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்தது இல்லை. அதேநேரத்தில், மானியங்கள் கொடுப்பதும், நிதி மேலாண்மையும் ஒன்றுக்கொன்று மாற்று இல்லை.

கரோனா பெருந்தொற்று காலத்ததில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது. எனினும், நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உணவுப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் தடையின்றி வழங்கி வந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறி இருக்கிறேன். இதற்குக் காரணம், அப்போதுதான் ஒப்பீட்டளவில் மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது நன்கு புரியும். வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே நரேந்திர மோடி அரசின் நோக்கம். அதை நோக்கியே அரசு செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE