ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பாய் சோரன்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவரும் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான சம்பாய் சோரன் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநரை சந்தித்து புதன்கிழமை உரிமை கோரினார். இருந்தும் ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர்.

வீடியோ மூலம் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வழங்கினர். இருந்தும் ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வராக சம்பய் சோரன் ஆட்சியமைக்க வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவரோடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆலம்கிர் ஆலம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சத்யானந்த் போக்தா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அடுத்த 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது. அதில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தகவல். இதனை ஆலம்கிர் ஆலம் உறுதி செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE