கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த எதிர்ப்பு: கடையடைப்புக்கு மசூதி குழு அழைப்பு

By செய்திப்பிரிவு

வாரணாசி: கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைக்குமாறு அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை (ஏஐஎம்சி) அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஏஐஎம்சி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மசூதியில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் தங்களின் கடைகளை மூடியிருப்பார்கள். 1993-க்கு முன்பு வரை கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் பூஜை நடைபெற்றது என்ற தவறான கூற்றுக்கு முஸ்லிம்கள் எதிப்பு தெரிவித்துள்ளனர். மசூதியின் தெற்கு பாதாள அறையில் எந்தவிதமான பூஜையும் நடைபெறவில்லை. மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து முஸ்லிம் சமூகம் உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளது" என்று கூறியுள்ளார்.

இதனிடையே வியாழக்கிழமை நடந்த முஸ்லிம் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களின் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் பேசிய நோமானி, "முஸ்லிம்கள் அமைதியை காக்க வேண்டும். வதந்திகளை புறக்கணிக்க வேண்டும். மக்கள் தேவையில்லாமல் எங்கும் செல்ல வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முன்னதாக, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், “கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா புதன்கிழமை ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், போலீஸாருடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்தார். அவரது உத்தரவின்படி கியான்வாபி மசூதியை ஒட்டி அமைந்த வியாஸ் மண்டபத்தின் இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து தினமும் 5 வேளை பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. முதல் பூஜை நள்ளிரவு நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து இந்துக்கள் இரண்டாவது நாளாக இன்றும் மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE