இடைக்கால மத்திய பட்ஜெட் 2024 ஹைலைட்ஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முத்ரா திட்டத்தில் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் முன்னேற்றம் குறித்து அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்கள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியில் மாணவிகளின் சேர்க்கை 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகளில் பெண்களின் சேர்க்கை 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவிலான பெண் கல்வியில் இந்தியா முன்வரிசையில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் இந்திய தொழிலாளர் வளத்தில் பெண்களின் பங்களிப்பு 23.3 சதவீதமாக இருந்தது.

இது, கடந்த 2022-23-ம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.'லட்சாதிபதி பெண்கள்' திட்டத்தில் 83 லட்சம் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவெடுத்து வருகின்றனர். அடுத்த கட்டமாக 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம் பெண்களின் நலனுக்காக 'முத்தலாக் தடை' சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிஎம் அவாஸ் யோஜ்னா திட்டத்தில் கட்டப்படும் வீடுகளில் சுமார் 70 சதவீத வீடுகள் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2023 ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கிராமங்களில் 2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு என்று கூறினார். பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையில் 'லட்சாதிபதி பெண்கள்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 83 லட்சம் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த ஒரு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு விரிவாக்கப்படும்: மின்சார வாகன கட்டமைப்பை அரசு மேம்படுத்த உள்ளது. மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் பொதுப் போக்குவரத்துக்கு மின்சார பேருந்துகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் அரசு கவனம் செலுத்த உள்ளது. இயற்கை எரிவாயுவுடன் உயிரி எரிவாயு கலப்பது கட்டாயமாக்கப்படும்.

லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை: லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார்.

அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இவை வைரலாக பரவின. இந்நிலையில் லட்சத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க துறைமுக இணைப்பு, சுற்றுலா உட்கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாட்டுக்கான பல்வேறு வசதி திட்டங்கள், லட்சத்தீவு உட்பட பிற இந்திய தீவுகள், சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்படும்.

லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 தீவுகள் அடங்கிய லட்சத்தீவுகளில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான வசதிகள், ஓட்டல்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் அவமதித்து வலைதளத்தில் செய்த பதிவு, இந்தியா - மாலத்தீவுக்கு இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது. பல இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்தனர். மேலும், பாய்காட் மாலத்தீவு என்ற ஹேஷ்டேக் மூலம் மாலத்தீவை தொடர்ந்து புறக்கணித்தனர். ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) போன்ற சுற்றுலா பயண செயலிகள் மாலத்தீவை தங்களது வலைதளத்திலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தன.

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்: 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய ரயில்வே மிகப்பெரிய உந்துதலாக உள்ளது. அதன் காரணமாக, ரயில்வே பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் நிலையங்கள் புதுப்பித்தல் ஆகியவற்றில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ரயில்வே பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மூன்று முக்கிய பிரிவு வழித்தடங்களை ரயில் மூலம் இணைக்க முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எரிபொருள், கனிமம், சிமெண்ட் பிரிவிலும், துறைமுக இணைப்பிலும், மூன்றாவதாக அதிக போக்குவரத்து அடர்த்தி மிகுந்த பகுதிகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான பகுதிகள், பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிக போக்குவரத்து அடர்த்தி மிகுந்த பகுதிகளில் புதிய வழித்தடங்களை உருவாக்குவது ரயில் பயணிகளின் வேகமான மற்றும் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய உதவும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போதைய சேர் கார் சேவை என்பது தூங்கும் வசதியுடன் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இல்லை. அந்த குறையைப் போக்கவே ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இது, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை விட சிறப்பாக இருக்கும். சமீபத்தில், இந்திய ரயில்வே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இது, சாமானியர்களுக்கான புதிய பிரீமியம் ரயிலாகும். இதிலும், வரும் நிதியாண்டில் ஏசி பெட்டிகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வேளாண் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில், வரும் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இதில் அதிக அளவாக பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.1.27 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பலப்படுத்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

வரும் நிதியாண்டில் மூலதன செலவுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். இது ஜிடிபியில் 3.4 சதவீதம் மற்றும் நடப்பு நிதியாண்டின் ஒதுக்கீட்டைவிட 11% அதிகம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் மூலதன செலவின நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததுடன் வேலை வாய்ப்பும் அதிகரித்தது” என்றார்.

ஏன் இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை? - ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், மத்திய நிதி அமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

என்ன காரணம்? - பொருளாதார ஆய்வறிக்கை என்பது முந்தைய நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது, வரும் நிதி ஆண்டில் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அறிக்கை ஆகும். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறை இந்த அறிக்கையை உருவாக்கும்.

இது தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படும். பொதுவாக, முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதே, அதற்கு முந்தையதினம் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்டது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட். இதன் காரணமாகவே இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு, வரும் ஜூலை மாதத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.

10 ஆண்டு பொருளாதார பயணம் இம்முறை பொருளாதார ஆய்வறிக்கைக்குப் பதிலாக, இந்தியப் பொருளாதாரப் பயணம் குறித்த அறிக்கையை “இந்திய பொருளாதாரம்: ஒரு பார்வை” என்ற தலைப்பில் மத்திய நிதி அமைச்சகம் கடந்த திங்கள் கிழமை வெளியிட்டது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு பொருளாதாரப் பயணம் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பொருளாதார இலக்கு குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் வழியாக தற்போது இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்டு 3-வது பெரிய நாடாக மாறும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனின் சிறிய பட்ஜெட் உரை: கடந்த 2019-ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் 2.17 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார். 2020-ல் அவரது பட்ஜெட் உரை 2.40 மணி நேரம் நீண்டது. இது இந்திய பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட உரையாகும். 2021-ல் 1.50 மணி நேரம் , 2022-ல் 1.33 மணி நேரம், 2023-ல் 1.27 மணி நேரம் அவர் உரையாற்றினார். இம்முறை இடைக்கால பட்ஜெட் என்பதால், அவரது உரை 58 நிமிடத்தில் முடிந்தது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டானது, கால அளவிலும் வார்த்தை எண்ணிக்கையிலும் மிகச் சிறிய பட்ஜெட் ஆகும். அந்தப் பட்ஜெட்டில் மொத்தம் 800 வார்த்தைகளே இடம்பெற்றன. 1991-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டானது, வார்த்தை எண்ணிக்கையில் மிக நீண்ட பட்ஜெட் ஆகும். அவரது பட்ஜெட் உரையில் 18,650 வார்த்தைகள் இடம்பெற்றன.

2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேற்று தாக்கல் செய்த நிலையில் கொல்கத்தா ரயில் நிலையத்தில்
நடைமேடையில் இறங்கிச் செல்லும் பயணிகள். படம்: பிடிஐ

இடைக்கால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சமூக நீதி

* ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கிய பிரிவினரின் முன்னேற்றத்தில் பிரதமர் கவனம் செலுத்தவுள்ளார்.
* கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து விடுபட மத்திய அரசு உதவியது.
* பிரதமரின் ஜன்-தன் வங்கி கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக ரூ.34 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி சேமிப்பு ஏற்பட்டது.
* பிரதமரின்-ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டது. இவர்களில் 2.3 லட்சம் வியாபாரிகள் 3-வது முறையாக கடன் பெற்றனர்.
* பாதிக்கப்படக் கூடிய குறிப்பிட்ட பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு உதவ பிரதமரின் - ஜன்மன் திட்டம் கொண்வரப்பட்டது.

* 18 வகையான தொழில்களில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மூலம் ஆதரவு அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் நலன்

* நாட்டில் உள்ள 11.8 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது.
* பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
* எலக்ட்ரானிக் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் 1361 மண்டிகள் இணைக்கப்பட்டு, 1.8 கோடி விவசாயிகளுக்கு சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

பெண்கள் முன்னேற்றம்

* முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி பெண் தொழில்முனைவோர்களுக்கு கடன்கள் அளிக்கப்பட்டன.
* உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
* அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய படிப்புகளில் மாணவிகளின் சேர்க்கை 43 சதவீதமாக உள்ளது. இது உலகளவில் அதிகம்.
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட வீடுகள் கிராம பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
* பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
* சிறியளவில் மேற்கொள்ளப்படும் உணவு பதப்படுத்துதல் தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 2.4 லட்சம் சுய உதவிக் குழுவினர் மற்றும் 60,000 தனிநபர்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளன.
* வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு, குறைந்த வட்டி அல்லது வட்டியில்லா கடனுதவி வழங்க ரூ.1 லட்சம் கோடியில் நிதி தொகுப்பு உருவாக்கப்படவுள்ளது.
* பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பலப்படுத்தவும், தற்சார்பு இந்தியா திட்டத்தை விரைவுபடுத்தவும் புது திட்டம் தொடங்கப்படவுள்ளது.
* உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான மூலதன செலவு 11.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.11,11,111 கோடியாக அதிகரிக்கப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம் ஆகும்.

சுற்றுலா துறை

* உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படவுள்ளன.
* தரமான வசதிகள் மற்றும் சேவைகளுடன் கூடிய சுற்றுலா மையங்களுக்கு தர நிர்ணயம் வழங்கும் முறையும் ஏற்படுத்தப்படவுள்ளன.
* சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்களும் வழங்கப்படவுள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய புதுமையான பட்ஜெட் - பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு: அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில், வரும் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல. அது அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட். இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு தூண்களாக விளங்கும் இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை கட்டி எழுப்பும் வகையில் அமைந்துள்ள இந்த பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது. இந்த பட்ஜெட் இளைய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்,
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் சந்தித்தார். அப்போது அவருக்கு இனிப்பு ஊட்டி
வாழ்த்து தெரிவித்தார் குடியரசுத் தலைவர்.

50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, “தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். பல்வேறு துறைகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு நிதி ஏற்படுத்தப்படும்.

குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதியுதவி அல்லது மறு நிதியுதவிக்காக இது பயன்படுத்தப்படும். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க மாநிலங்களில் மேம்பாட்டுக்கான சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டு 50 வருட வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதம் 300 யூனிட் இலவசம்: வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கடந்த ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, பிரதமரின் சூர்யோதயா திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்படி, நாடு முழுவதும் உள்ள 1 கோடி ஏழை, நடுத்தர மக்களின் வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் (சோலார் பேனல்) அமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், “பிரதமரின் சூர்யோதயா திட்டத்தின் கீழ், தங்களுடையவீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ்சோலார் பேனல் அமைப்பவர்கள் தங்களிடம் உபரியாக உள்ள மின்சாரத்தைவிற்பனை செய்யலாம். இதன்மூலம் பயனாளர்கள் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும். இந்த திட்டத்தை ஊரக மின் கழகம் செயல்படுத்தும்” என்றார்.

மக்கள் தொகை அதிகரிப்பால் சவால்கள்: தீர்வு காண உயர்நிலைக் குழு - இந்தியாவின் மக்கள் தொகை பல ஆண்டுகளுக்கு அதிகரிக்கும், அதே நேரத்தில் சீன மக்கள் தொகை கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து குறைந்து வருகிறது. இது தொடர்ந்து குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தொகை வளர்ச்சி சவால்கள் குறித்து பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மக்கள் தொகை வளர்ச்சி சவால்களுக்கு தீர்வு காண உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைக்கும். வளர்ந்த இந்தியா என்ற இலக்குக்கு ஏற்ப, இந்த குழு, மக்கள் தொகை வளர்ச்சி சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் வளர்ச்சி ஏற்படும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ந்த நாடு என்ற கனவு நனவாகும்.

ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் கடந்தஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வரை 12 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளர்ன. இந்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு நாட்டில் உள்ள அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஒரு கோடி வரி செலுத்துவோரின் வரி கோரிக்கைகள் ரத்து செய்யப்படும்: வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் முறை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், 1 கோடி வரி செலுத்துவோர் மேலும் பயனடையும் வகையில் நிலுவையில் உள்ள வரி கோரிக்கைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நேரடி வரி பாக்கி தொடர்பாக வருமான வரித் துறையிடம் முறையீடு செய்து தீர்வுக்காக நீண்ட நாள் காத்துக் கொண்டிருக்கும் வரி செலுத்துவோர் பயன்பெறும் விதமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

1962-ம் ஆண்டிலிருந்தே நேரடி வரி பாக்கி தொடர்பான தகராறுகளுக்கு முழுமையாக தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-10 நிதியாண்டு வரையிலான காலத்துக்கு ரூ.25,000 வரையிலும், 2010-11 முதல் 2014-15 வரையிலான காலகட்டத்துக்கு ரூ.10,000 வரையிலும் நிலுவையில் உள்ள நேரடிவரிக் கோரிக்கைகள் திரும்பப் பெறப்படும். இந்த வரி பாக்கி தள்ளுபடி நடவடிக்கையால் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவர்.

உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நடப்பு நிதியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: வரும் நிதியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டெம் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் மேலும் பல மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். 047-ம் ஆண்டுக்குள் நாட்டை முன்னேறிய பாரதமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் உள்ளமருத்துவமனை வசதிகளைக் கொண்டே கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக ஒரு குழுவையும் அரசு அமைத்துள்ளது. ரூ.1 லட்சம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். இந்த நிதியம் மூலம் நீண்ட கால நிதி உதவி, மறு நிதி உதவிச் சேவைகள், குறைந்த வட்டி அல்லது வட்டி இல்லாமல் வழங்கப்படும். இந்த நிதியமானது 50 ஆண்டு காலத்துக்கு வட்டி இல்லாதகடனை வழங்குவதற்காக தோற்றுவிக்கப்படும்.

இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதை இன்றியமையாததாக அரசு கருகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட் அப் கடன் உத்தரவாதத் திட்டங்கள் இளைஞர்களுக்கு தொடங்கப்படும். தரமான கற்றலை வழங்குவதற்காகவும், நிபுணர்களை உருவாக்கவும் பிரதமரின் ஸ்ரீ (SHRI) பள்ளிகள் தொடங்கப்படும்.

ஸ்கில் இந்தியா இயக்கம் மூலம் நாட்டில் 1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 54 லட்சம் இளைஞர்களுக்கு மறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 3 ஆயிரம் புதிய ஐடிஐ தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் இதுவரை 7 புதிய ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐ எம்கள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேசியக் கல்விக் கொள்கையானது தரமான கற்பித்தல், வளர்ப்பு, முழுமையான மனிதர்கள், நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை கடந்த 10 ஆண்டுகளில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. ஸ்டெம் தொடர்பான படிப்புகளில், சிறுமிகளும் பெண்களும் 43 சதவீதத்தை பதிவு செய்கின்றனர். இது உலக அளவில் மிகவும் அதிகமாகும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்தார்.

நம்பிக்கை, வலிமை, சுயசார்பின் புளூபிரின்ட்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் நம்பிக்கை: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய இடைக்கால பட்ஜெட், இந்தியாவின் நம்பிக்கை, வலிமை, சுயசார்பு போன்றவற்றுக்கான ‘புளூபிரின்ட்’ போல உள்ளது.

தற்போது உலகளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் வரும் 2027-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 7 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதார நாடாக மாறும்.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக மத்திய இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை நிச்சயம் அடைவோம். நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியை தரும் வகையில் பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வளர்ச்சியை கொண்டு வரும். அனைவருக்கும் ஊக்கம் தரும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்