புதுடெல்லி: மக்களவையில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகத்தினரின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறோம். சமூகநீதியை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.
விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர் களுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பொதுவாக, இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது இல்லை. அதே மரபை நாங்களும் கடைபிடிக்கிறோம். இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய வருமான வரி விகிதம், புதிய வருமான வரி விகிதம் அப்படியே தொடரும்.
நேரடி, மறைமுக வரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உள்ளூர் நிறுவனங்களுக்கான 22 சதவீத கார்ப்பரேட் வரி, புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான 15 சதவீத வரி அப்படியே தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ஒரு மாதத்தில் சராசரியாக ரூ.1.66 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகிறது.
» ஆட்சியமைக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு: இன்று ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கிறார்
அயோத்தி பால ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, ‘பிஎம்சூர்யோதயா யோஜனா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி, நாடு முழுவதும் 1 கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்உற்பத்திக்கான அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாதத்துக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்: ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இதுவரை 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்படி, வாடகை வீடு, குடிசை பகுதி, அங்கீகாரமற்ற மனை பிரிவுகளில் வசிப்போர் புதிய வீடுகளை வாங்க வழிவகை செய்யப்படும்.
‘லட்சாதிபதி பெண்கள்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 1 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுகின்றனர். இதில், அடுத்தகட்டமாக 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள்.
இலவச புற்றுநோய் தடுப்பூசி: கருப்பை புற்றுநோயை தடுக்க9-14 வயது சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். அங்கன்வாடி, ஆஷா தொழிலாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 80 கோடி பேருக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் 78 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 10 கோடி பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நேரடி மானிய திட்டங்களால் ரூ.2.7 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய பொது பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலையங்கள், பாலங்கள், எக்ஸ்பிரஸ் சாலைகள், மருத்துவமனைகள் கட்டப்படும்.
‘உதான்’ திட்டத்தில் புதியவிமான நிலையங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்படும். இந்திய விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்களை வாங்க உள்ளன.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண் துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் மூலம் மீன்வள துறை மேம்படுத்தப்படும். இதன்மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன்கள் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 லட்சம்புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் மீன்வள துறை 4 சதவீதபங்களிப்பை வழங்குகிறது. இதைமேலும் அதிகரிக்க ‘நீல பொருளாதாரம் 2.0’ திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தில் கடலோர பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடலோர சுற்றுலா தலங்களில் ‘ஸ்கூபா டைவிங்’ சாகச வசதி ஏற்படுத்தப்படும்.
ஜி20 உச்சி மாநாட்டின்போது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
வரும் 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்சைடு) உமிழ்வு இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும். காற்றாலை உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும்.
சுற்றுலா துறையை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை விரைவுபடுத்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். அந்நிய முதலீட்டை அதிகரிக்கவும், பணவீக்கத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விலை குறையாது, உயராது: இடைக்கால பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, ‘‘நேரடி மற்றும் மறைமுக வரியால் பல்வேறு வகையான பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது சந்தையில் விற்பனையாவதில் 90 சதவீத பொருட்கள், ஜிஎஸ்டி வரம்பில் வருகின்றன. எனவே, ஜிஎஸ்டி கவுன்சில்எடுக்கும் முடிவுகளை பொருத்தே பொருட்களின் விலை மாறும். இடைக்கால பட்ஜெட்டில் நேரடி, மறைமுக வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே,எந்த பொருளும் விலை குறையாது, விலை உயராது’’ என்றனர்.
துறைகள், முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு: சாலை போக்குவரத்து துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி, நுகர்வோர் பொது விநியோக துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடி, உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி, ரசாயனம், உரத் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி, தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.86,000 கோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ரூ.7,500 கோடி, செமி கண்டக்டர் திட்டத்துக்கு ரூ.6,903 கோடி, சூரிய மின்உற்பத்தி திட்டத்துக்கு ரூ.8,500 கோடி, தேசிய ஹைட்ரஜன் திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago