கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹேமந்த் சோரன் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகினர். தங்கள் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் எனஅவர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து இந்த மனுவை வெள்ளிக்கிழமை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு: நேற்று முன்தினம் கைது நடவடிக்கைக்கு முன் ஹேமந்த் சோரன் வெளியிட்ட வீடியோவில், ‘‘அமலாக்கத் துறையினர் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள். அவர்கள் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. டெல்லியில் சோதனை நடத்தி எனது நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர்.

நான் துவண்டு போகமாட்டேன். இறுதியில் உண்மை வெல்லும். ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக நாம் போரிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தெலங்கானாவில் எம்எல்ஏக்கள்: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) எம்எல்ஏ சம்பய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டுள்ளது. எனினும், ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்க தாமதம் ஆனது. இந்நிலையில், ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏ.க்கள் தெலங்கானா மாநிலத்துக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த சூழலில் நள்ளிரவு நேரத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆட்சி அமைக்க சம்பய் சோரனுக்கு அழைப்பு விடுத்தார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE