“நிதி பகிர்வில் பாரபட்சம் நீடித்தால் தென் இந்தியாவில் தனி நாடு கோரிக்கை எழும்” - காங். எம்.பி டி.கே.சுரேஷ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று காங்கிரஸ் எம்.பி டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புறநகர் எம்பி-யும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், "ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய பங்கை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை. தென் இந்திய மாநிலங்கள் தொடர்ந்து அநீதியை எதிர்கொண்டு வருகின்றன.

தென் இந்திய மாநிலங்கள் மூலம் பெறப்படும் வரி வருவாய் வட இந்திய மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரிக்கைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். மத்திய அரசு எங்களிடம் இருந்து ரூ.4 கோடியை பெறுகிறது. ஆனால், சொற்பத் தொகையையே எங்களுக்கு வழங்குகிறது. இது குறித்து நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், அனைத்து தென் இந்திய மாநிலங்களும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

டி.கே.சுரேஷின் இந்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள டி.கே.சிவகுமார், "தென் இந்தியாவின் வலி குறித்தே அவர் பேசி உள்ளார். ஒட்டுமொத்த நாடும் ஒன்றுதான். இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் தர முடியாது. பட்ஜெட்டில் சமமாக நிதிப் பங்கீடு நடைபெறவில்லை. கர்நாடகா மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாயை வழங்கி வருகிறது. ஆனால், தென் இந்தியாவுக்கு எந்த பெரிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் பின்தங்குவதாக உணர்கிறோம். அதேநேரத்தில், நாடு முழுவதும் ஒன்றுதான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். பிராந்திய வாரி கோரிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளார்.

டி.கே. சுரேஷின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, "பிரித்தாளும் வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தற்போது அக்கட்சியின் எம்.பி., வடக்கு - தெற்கை பிரிக்க வேண்டும் என்கிறார். சமீப ஆண்டுகளில் கர்நாடகாவுக்கான வரிப் பங்கீட்டைப் பொறுத்தவரை அதிரித்தே வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இரண்டின் ஆட்சிக்காலமான 2009-14ல் மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கிய நிதி ரூ. 53,396 கோடி. அதேநேரத்தில், பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலமான 2014-19ல் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 1.35 லட்சம் கோடி.

ஒருபக்கம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், யாத்திரை செல்கிறார். மற்றொரு பக்கம், அதே கட்சியைச் சேர்ந்த, நாட்டை பிரிக்க நினைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் பெற்றிருக்கிறோம். நாடு துண்டாடப்படுவதை கர்நாடக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உரிய பதிலடிமை மக்கள் கொடுப்பார்கள். காங்கிரஸ் இல்லா பாரதத்தை மக்கள் உறுதிப்படுத்துவார்கள்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்