வாரணாசி: கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாரணாசி நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மசூதி தரப்பு வழக்கறிஞர் அக்லக் அகமது, "2022-ல் வழங்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை, 1937-ம் ஆண்டின் இந்திய தொல்லியல் துறை அறிக்கை ஆகியவை தீர்ப்பில் மீறப்பட்டுள்ளன. 1993-க்கு முன்பு இங்கு வழிபாடு மேற்கொண்டதாக இந்து தரப்புக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அங்கு தெய்வ விக்ரகங்களும் இல்லை" என தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் தங்கள் தரப்பை கேட்க கோரி இந்துக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடங்கிய வழிபாடு: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் உள்ள தெய்வங்களை வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று காலை முதல் வழிபாடுகள் நடக்கத் தொடங்கி உள்ளன. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "கியான்வாபி மசூதி வளாகத்தில் தரைத்தளத்தில் இன்று காலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியும் பூஜையும் நடைபெற்றன. இதேபோல், நண்பகல் 12 மணிக்கும் ஆரத்தியும் பூஜையும் நடைபெற்றது. தினமும் காலை 3.30 மணி, பகல் 12 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி, பின் இரவு 10.30 மணி ஆகிய நேரங்களில் இங்குள்ள தெய்வங்களுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
இங்கு பாரம்பரியமாக பூஜை செய்து வந்த வியாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜிதேந்திர நாத் வியாஸ் பூஜை செய்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீண்டும் பூஜை செய்வதற்கு அனுமதி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இன்று பூஜை நடந்தபோது, காசி விஸ்வநாதர் ஆலயத்தைச் சேர்ந்த 5 பூஜாரிகள், வியாஸ் குடும்ப உறுப்பினர்கள், வாரணாசி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் முன்னிலையில் இந்த பூஜை நடைபெற்றது" என தெரிவித்துள்ளார்.
» “இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது” - காங். எம்.பி சசி தரூர் விமர்சனம்
» “அலங்கார வார்த்தைகள்...” - எதிர்க்கட்சிகள் உதிர்த்த கருத்துகள் @ இடைக்கால பட்ஜெட் 2024
பின்னணி என்ன? - வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர குமார் பதக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இன்னும் 7 நாட்களில் இந்துக்கள் அங்கு சென்று வழிபட முடியும். அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago