“மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புதுமையானது” - பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது என்றும், புதுமையானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் 2024-25-க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது; புதுமைகள் நிறைந்தது. தொடர்ச்சிக்கான நம்பிக்கையை இது அளித்துள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் எனும் 4 முக்கிய தூண்களுக்கு இந்த பட்ஜெட் அதிகாரம் அளித்துள்ளது. 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை இந்த பட்ஜெட் வழங்கி உள்ளது.

இளம் இந்தியாவின் இளைஞர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வு மற்றும் புதுமைகளுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக மேலும் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயன்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் நிதிபற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், செலவின மூலதனத்திற்கு ரூ. 11,11,111 கோடி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், இந்திய பொருளாதாரம் இனிப்பான புள்ளியாக உள்ளது. 21ம் நூற்றாண்டுக்கான நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் அதேநேரத்தில், இளைஞர்களுக்காக ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கு வழிகாட்டுவதாக இந்த பட்ஜெட் உள்ளது. பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ள மிக முக்கிய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமிர்த காலத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சி காண்பதற்கான வெளிச்சத்தை இந்த பட்ஜெட் பாய்ச்சியுள்ளது. மிகச்சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்ளார்ந்த பட்ஜெட் உரையை வாசித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, "வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான அடிக்கல்லை நாட்டக்கூடியதாக இந்த தொலைநோக்கு பட்ஜெட் உள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கான வீடு கட்டும் திட்டம் குறித்த அறிவிப்பு புரட்சிகரமான முன்னெடுப்பு. ஏழ்மையை ஒழிப்போம் என்று நாங்கள் வெற்று கோஷமிடவில்லை. மாறாக, வறுமையை போக்கி இருக்கிறோம். 3 கோடி பெண் லட்சாதிபதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின் மீதும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்