வருமான வரி விலக்கில் மாற்றமில்லை; ரூ.7 லட்சம் உச்சவரம்பே நீடிக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வருமான வரி விலக்கில் மாற்றமில்லை என்றும், ரூ. 7 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிப்பது தொடரும் என்றும் தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையில் அவர், “7 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கு நீடிக்கும். சில்லறை வணிகங்களுக்கான வரிவிதிப்பு வரம்பு ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தப்படும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான வரி விகிதம் தற்போதுள்ள நிறுவனங்களுக்கு 30% லிருந்து 22% ஆகவும் குறைக்கப்படுகிறது. சில புதிய உற்பத்தித் தொழில்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில், “புதிய கல்விக் கொள்கை 2020, மிகப் பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 54 இளைஞர்களுக்கு கூடுதல் பயிற்சி மற்றும் மறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 ஆயிரம் ஐடிஐ-க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 319 பல்கலைக்கழகங்கள் உட்பட ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் அரசு, விரிவான நிர்வாகம், மேம்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, உடனடியாக செயல்படக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய நிர்வாகத்தை எங்கள் அரசு வழங்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையான சராசரி வருமானம் 50% அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகள் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியின் வருடங்களாக இருக்கும். வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்கும் பொன்னான தருணங்களாக அவை இருக்கும். ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவவை, ஒவ்வொரு இந்தியரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நிலைநிறுத்தும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், திறன்களை மேம்படுத்த உதவும் பொருளாதாரக் கொள்கைகளை அரசு பின்பற்றும்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற கொள்கையால் அரசு வழிநடத்தப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்கு கிழக்குப் பகுதியையும் அதன் மக்களையும் உந்துசக்தியாக மாற்றுவதில் எங்கள் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை நெருங்கி வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும். நடுத்தர வர்க்கத்தவர்கள் சொந்த வீடுகளை வாங்க அல்லது கட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கும்.

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டின் வெற்றி இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஆன்மிக சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும். இதேபோல் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்காக மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடனாக ரூ. 75 ஆயிரம் கோடி வழங்கப்படும். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மத ரீதியிலான மாற்றம் குறித்து ஆய்வு செய்ய உயர் அதிகாரம் மிக்க ஆய்வுக் குழு உருவாக்கப்படும்.

2014க்கு முந்திய சகாப்தத்தின் ஒவ்வொரு சவாலும் நமது பொருளாதார மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் மூலம் சமாளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டை உயர் வளர்ச்சியின் நிலையான பாதையில் கொண்டு சென்றுள்ளது. ஜூலை மாத முழு பட்ஜெட்டில், வளர்ச்சி அடைந்த இந்தியா குறித்த நோக்கத்திற்கான விரிவான செயல்திட்டத்தை எங்கள் அரசு முன்வைக்கும்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE