“ஹேமந்த் சோரன் கைது பாஜகவின் பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கை” - அகிலேஷ் யாதவ் சாடல்

By செய்திப்பிரிவு

பாட்னா: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இது பாஜகவின் பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஜனநாயக விரோதச் செயல்” என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) கூறியிருப்பதாவது: “ஜார்க்கண்ட் ஒருபோதும் அடிபணியாது. அம்மாநிலத்தில் பாஜகவினுடைய பழங்குடியினருக்கு எதிரான முகம் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஜார்க்கண்டின் துணிச்சல் மிக்க போர்வீரன் ஹேமந்த் சோரன். அவர் பாஜகவின் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் முதலாளித்துவவாதிகளிடமிருந்து பழங்குடிகள் மற்றும் பழங்குடிகளின் பகுதிகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் ஒரு தடுப்புச்சுவர் போல செயல்பட்டார். அதனால் ஜார்க்கண்ட் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இதனாலேயே அவர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். இது ஜார்க்கண்ட் மக்களின் எண்ணங்களை அவமதிக்கும் செயல். அதனால் ஜார்க்கண்ட்வாசிகள் இந்தமுறை பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள், பாஜக ஒரு வரலாற்றுத் தோல்வியைச் சந்திக்கும்.

உண்மையில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகிய பெரிய பிரச்சினைகளுக்கு முன்னால் தான் தோல்வியடைந்து விட்டதாக பாஜக கருதுகிறது. அதனால்தான் அரசுகளை கவிழ்ப்பதன் மூலமாக தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காக சில இடங்களில் குறிப்பிட்ட முதல்வர்களை கைது செய்கிறார்கள், சில இடங்களில் போலி வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தார்மீக ரீதியாக தோல்வியடைந்து விட்டது. அரசியல் ரீதியான அதன் தோல்வி மட்டும் தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜகவின் சில ஜனநாயக விரோத நடவடிக்கைகளால், முன்பு பாஜகவுக்கு வாக்களித்தவர்களும் இம்முறை மனம் மாறியுள்ளனர்.

நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பிடிஏவில், பழங்குடி சமூகமும், பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் பாதி மக்கள் தொகையினர் அதாவது பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். பாஜக பிடிஏவுக்கு எதிரானது. மொத்தத்தில் பிடிஏ என்பது இந்த நாட்டின் 90 சதவீத மக்களின் ஒற்றுமைக்கான பெயர். இந்த ஒற்றுமையைப் பார்த்து பாஜக பயந்துள்ளது. நம்மை பிரிப்பதற்காக சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அச்சமூட்ட நினைக்கிறது". என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்