இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சக அலுவலகத்துக்கு வருகைதந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் - எதிர்பார்ப்புகள் என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதனை ஒட்டி அவர் இன்று காலை 9 மணியளவில் நிதியமைச்சக அலுவலகத்துக்கு வந்தடைந்தார். அவருடன், நிதியமைச்சக சகாக்களான இணை அமைச்சர்கள் பகவத் காரத், பங்கஜ் சவுத்ரி ஆகியோரும் உடன் இருந்தனர். நீல வண்ணப் புடவையில் வந்திருந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் இடைக்கால பட்ஜெட் அடங்கிய டேப்லட் கொண்டு வந்தார். அது சிவப்பு நிற உறையில் இடப்பட்டிருந்தது. டெல்லியில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் மழைச்சாரலுக்கு மத்தியில் இடைக்கால பட்ஜெட்டுக்கு முந்தைய புகைப்படத்தை தனது சகாக்கள், அமைச்சரக அதிகாரிகள் சூழ எடுத்துக் கொண்டார்.

இந்திய நிதி அமைச்சர்களில் மிக அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். அவர் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, மொத்தமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். இவற்றில் 1959–1964 வரை 5 முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என 6 பட்ஜெட்களை தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்தார். இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்புகள் என்ன? விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்படுவது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

இருப்பினும் தேர்தலை கருத்தில் கொண்டு இன்றைய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவசாயப் பெருமக்களின் வருவாயைப் பெருக்கும் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை ரூ.8000-ஆக உயர்த்தி அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நடுத்தரவர்க்க மக்கள் வழக்கம்போல் வரிச் சலுகை தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளனர். இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரசாங்கமோ ஏற்கெனவே இருக்கும் சமூகநலத் திட்டங்களை சற்று மெருகேற்றி அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE