கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபட அனுமதி: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் உள்ள தெய்வங்களை வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர குமார் பதக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்ரதவிட்டுள்ளது. எனவே, இன்னும் 7 நாட்களில் இந்துக்கள் அங்கு சென்று வழிபட முடியும். அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது’ என தெரிவித்தார்.

அதேநேரத்தில், வாரணாசி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கியான்வாபி மசூதி தரப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கையும் பின்புலமும்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள கியான்வாபி மசூதி, முகலாய மன்னர்களால் அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்திய ஏஎஸ்ஐ, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் நகல்கள் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன.

அந்த அறிக்கையில், “கியான்வாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமான் இன்டிஜாமியா மசூதி குழு செயலாளர் முகமது யாசின் கூறும்போது, “இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்திருப்பது ஒரு அறிக்கைதான். இது தீர்ப்பு அல்ல. இது தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் இருக்கலாம். இந்த விவகாரத்தில் அவையெல்லாம் இறுதியானதாக இருக்க முடியாது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு) சட்டத்தை சுட்டிக்காட்டி எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம்” என்றார். அந்தச் சிறப்பு சட்டமானது, அயோத்தி ராமர் கோயில் தவிர நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த வழிபாட்டுத் தலங்களை மாற்றுவதைத் தடுக்க வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE