‘தேர்தல் உரை’ போலவே குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நாடாளுமன்ற உரை, ‘தேர்தல் உரை’யைப் போன்று இருந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவரின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்கான உரை, தேர்தல் உரையைப் போல் இருக்குமாறு தயாரித்து அளித்திருக்கிறார்கள். அதைத்தான் அவர் வாசித்திருக்கிறார். ஆட்சியாளர்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அவையெல்லாம் குடியரசுத் தலைவரின் உரையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏழ்மையை போக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், 81 கோடி மக்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவரின் உரை ஒருதலைபட்சமான தொகுப்பு. பல்வேறு முக்கிய விவகாரங்கள் விடுபட்டுள்ளன. வாக்களிக்கச் செல்லும்போது மக்கள் அவற்றை நினைவில் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பியான கவுரவ் கோகாய், "உண்மையை மறைக்க அரசு முயன்றுள்ளதாகத் தெரிகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடியரசுத் தலைவரின் உரையில் நாட்டின் பொருளாதார சமூக பிரச்சினைகள் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்கள் மத்திய பட்ஜெட் மூலம் பயனடைவார்கள். இம்முறையும் அது தொடரும் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்பியான டேனிஷ் அலி, "குடியரசுத் தலைவரின் உரையில் எந்த சிறப்பும் இல்லை. வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், யாருக்கு? உண்மைதான், இந்த அரசின் நண்பர்களில் சிலர் வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இந்த அரசுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை" என விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இத்தகைய விமர்சனங்களை கடுமையாக எதிர்த்துள்ள பாஜக எம்பி திலிப் கோஷ், "குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை குறித்து இளைஞர்களிடம் கேட்க வேண்டும்; எதிர்க்கட்சிகளிடம் அல்ல. நாட்டின் இளைஞர்கள் திறமையானவர்கள். அவர்கள் பல்வேறு புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இண்டியா கூட்டணியில் இருந்தவர்கள் பிரதமரோடு சண்டையிட தயாராக இருந்தார்கள். ஆனால், தற்போது அந்த அணியின் கேப்டனே வெளியேறி விட்டார். எனவே, தற்போது அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி, "நாட்டின் வளர்ச்சிக்காக பிரமதர் மோடி மிகச் சிறந்த முறையில் பாடுபட்டு வருகிறார். எனவே, எதிர்க்கட்சிகளிடம் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், "கடந்த சில ஆண்டுகளாக உலகம் இரண்டு போர்களையும், கோவிட் பெருந்தொற்றையும் சந்தித்தது. இருந்தபோதிலும், எனது அரசு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. குடிமக்கள் மீது சுமையை ஏற்றவில்லை. 2023-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆண்டு. சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுத்தது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உள்ளது" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. | முழுமையாக வாசிக்க > “ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு” - நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

மேலும், “பல நூற்றாண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பால ராமர் சிலையை 5 நாட்களில் 13 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது, சட்டப்பிரிவு 370 என்பதும் வரலாறாக மாறிவிட்டது. மேலும், இந்தப் நாடாளுமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது” என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE