16-வது நிதிக்குழுவுக்கு 4 உறுப்பினர்கள் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த மாதம் உருவாக்கப்பட்ட 16வது நிதிக்குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, சௌமியா காந்தி கோஷ், அன்னி ஜார்ஜ் மேத்யூ, நிரஞ்சன் ராஜதயாக்ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி 16வது நிதிக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். இந்த நிதிக்குழுவில் 4 உறுப்பினர்கள் இருப்பது வழக்கம். அதன்படி, நான்கு உறுப்பினர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். 15-வது நிதிக்குழுவில் உறுப்பினராக இருந்த அஜய் நாராயண் ஜா, ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரி அன்னி ஜார்ஜ் மேத்யூ, ஆர்த்தா குலோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் ராஜதயாக்ஷா ஆகியோர் 16-வது நிதிக்குழுவின் முழு நேர உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும், சௌமியா காந்தி கோஷ் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவார் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு, 16-வது நிதிக்குழுவின் செயலாளர் ரித்விக் ரஞ்சனம் பாண்டே, இரண்டு இணைச் செயலாளர்கள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகர் ஆகியோர் உதவியாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக்குழு என்பது, மத்திய அரசுக்கும், மாநிலஅரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டதாகும். அதாவது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரியை பகிர்ந்தளிப்பதற்கான திட்டங்களை வகுத்தல், பேரிடர் மேலாண்மைக்கு வழங்கப்படும் நிதியை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை நிதிக்குழு மேற்கொள்ளும். தற்போதைய 16-வது நிதிக்குழு, ஏப்ரல் 2026 முதல் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே வரி வருவாய் பகிர்வுக்கான வழிமுறையை பரிந்துரைக்கும். அந்த வகையில், இந்த நிதிக்குழு தனது பரிந்துரையை அக்டோபர் 31, 2025-க்குள் குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி வரை அல்லது அக்டோபர் 31, 2025 வரை எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பார்கள். 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசின் வரித் தொகுப்பில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று என்.கே.சிங் தலைமையிலா 15-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. இது 14-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அதே அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE