16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு: அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி

By செய்திப்பிரிவு

லக்னோ: வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 11, ஆர்எல்டி கட்சிக்கு 7, சிறிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளது.

இந்த சூழலில் 16 வேட்பாளர்கள் அடங்கிய சமாஜ்வாதியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் தொகுதியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட டிம்பிள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரகுராஜுக்கு 3.29 லட்சம் வாக்குகள் கிடைத்தன.

அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினர் தர்மேந்திர யாதவ், பதாவுன் தொகுதி வேட்பாளராகவும், மற்றொரு உறவினர் அக்சய் யாதவ், பெரோஷாபாத் தொகுதி. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். போஜ்புரி திரைப்பட நடிகை கஜோல் நிஷாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சம்பல் தொகுதியில் ஷபிகுர் ரஹ்மான், ஏட்டா தொகுதியில் தேவேஷ் சாக்யா, கெரி தொகுதியில் உத்கர்ஷ் வர்மா, தெளராஹ்ரா தொகுதியில் ஆனந்த், உன்னாவ் தொகுதியில் அனு தாண்டன், பரூக்காபாத் தொகுதியில் நவல் கிஷோர், அக்பூர் தொகுதியில் ராஜாராம், பாண்டா தொகுதியில் சிவசங்கர் சிங், ஃபைசாபாத் தொகுதியில் அவதேஷ் பிரசாத், அம்பேத்கர் நகர் தொகுதியில் ராம்பிரசாத் சவுத்ரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE