“பயந்துபோய் பணி செய்யாமல் இருக்க முடியாது” - சில்க்யாரா சுரங்கத்துக்கு திரும்பிய தொழிலாளி பேட்டி

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளான சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட ஒரு தொழிலாளி பணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிக்குத் திரும்பிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியான மாணிக் தாலுக்தர் கூறுகையில், “நான் என் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். அந்த விபத்து விதிவசத்தால் நிகழ்ந்த ஒன்று. அதற்காக பயந்து போய் நாம் பணி செய்யாமல் இருக்க முடியாது. என்னுடைய பணியில் உள்ள அபாயங்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

முன்னதாக, உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த ஆண்டு நவ.12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். இயந்திரங்கள் தொழில்நுட்பம், மனித முயற்சி என 17 நாள்கள் நீண்ட பெரிய போராட்டங்களுக்கு பின்னர், தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு பணிகளின் போது தொடர்ந்து ஏற்பட்ட பின்னடைவு, மண் சரிவு, துளையிடும் இயந்திரத்தின் பழுது குறித்த அச்சம் என நீண்ட போராட்டத்தின் இறுதியில், ‘எலி வளை’ தொழிலாளர்கள், எஸ்கேப் டனல் அமைக்கும் திட்டம், ஆகர் இயந்திரம் மற்றும் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் இறுதி வெற்றி சாத்தியமானது. அந்த வெற்றியை நாடே கொண்டாடித் தீர்த்தது.

விபத்துக்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரங்கம் தோண்டும் பணிக்கு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பணியைத் தொடங்க கடந்த வாரம் அனுமதி அளித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE