ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் 13 மணி நேர விசாரணை: ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ராஞ்சி: நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரது டெல்லி வீட்டிலிருந்து 36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரனிடம் டெல்லி வீட்டில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த விசாரணை 13 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து, டெல்லி வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினருக்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய தகவலின் படி, ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் மற்றும் பல ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ கார் சோரன் பினாமி பெயரில் வாங்கியதாக தெரிகிறது. 48 வயதான சோரன் தான் பதவியிலிருந்து விலகுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத் தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல்வர் தலைமறைவாக உள்ளதால், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா இது குறித்து, “முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மக்களின் இதயங்களில் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே இது குறித்து கூறிகையில், “ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவரால் எப்படி அதிகாரிகளையோ அல்லது மாநில மக்களையோ பாதுகாக்க முடியும். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். சில தகவளின்படி, மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE