சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (சிமி) தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலிகரில் சிமி தொடங்கப்பட்டது. கடந்த 1980-ம்ஆண்டு தொடங்கி இந்த அமைப்பு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டில் சிமி அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நாளையுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அந்த வகையில் சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE