குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: பிப்.1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இதில் பல சலுகைகள், புதிய திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இது மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். ஜனவரி 31-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார்.

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், வரிக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியபோது, ‘‘நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி ஜனவரி 30-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை அனைத்துக் கட்சிகளும் அமைதியான முறையில் நடத்தித் தர வேண்டும்’’ என்றார்.

ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி (நாளை) தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE