தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற தலைவர்; ஆந்திர மாநிலத்தின் கோடீஸ்வர எம்.பி.ஜெயதேவ் அரசியலில் இருந்து விலகினார்

By செய்திப்பிரிவு

விஜயாவாடா: ஆந்திர மாநிலத்தின் குண்டூரைச் சேர்ந்த கோடீஸ்வர எம்.பி.யும்,அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான கல்லா ஜெயதேவ் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற தலைவராகவும் உள்ளார்.

அரசியலில் இருந்து விலகுவதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஜெயதேவ் கூறியதாவது: நேர்மையான தொழிலதிபர் அரசியலுக்கு வந்தால், வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசியல் சூழலாக உள்ளது. அரசியல் வரம்புகள் காரணமாக மத்திய அரசுக்கு எதிராக என்னால் எதுவும் பேசமுடிவதில்லை. அதேபோன்று, மாநிலத்துக்கு எதிராகவும் பேச இயலவில்லை.

அமைதியாக இருக்க முடியாது: எனவே, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டிக்கொண்டு இருதரப்பும், சண்டையிடுவதையும், கூச்சல் போடுவதையும் வாயைமூடிக்கொண்டு பார்க்கவேண்டியுள்ளது.

மீண்டும் வெற்றிபெறுவதைப் பற்றி கவலையில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்வது. பேசாமல் இன்னும் 5 ஆண்டுகள் அமைதியாக இருக்க வேண்டுமா?. என்னால் அதுபோன்று இருக்க முடியாது. எனவேதான், அரசியலில் இருந்து விலகுவதை நான் தேர்வு செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளேன். இவ்வாறு கல்லா ஜெயதேவ் கூறினார்.

ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிஆட்சிக்கு வந்தபிறகு சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஜெயதேவுக்கு சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமர ராஜ பேட்டரிக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடும்படி நோட்டீஸ் அனுப்பியது.

தெலங்கானாவில் அமர ராஜா: இப்பிரச்சினை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அமர ராஜா நிறுவன விரிவாக்கத் திட்டங்களை தெலங்கானாவில் மேற்கொள்ள உள்ளதாக கல்லா ஜெயதேவ் அறிவித்துள்ளார். அவருக்கு ரூ.683 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

ஜெயதேவ் 2014 மற்றும் 2019-ம் ஆண்டு குண்டூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்.பி.யாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE