மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகாரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்: கார்கே

By செய்திப்பிரிவு

புபனேஸ்வர்: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவில் சர்வாதிகாரம் தவிர்க்க முடியததாக ஆகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

ஒடிசா தலைநகர் புபனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணியில் இருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு தலைவர்(நிதிஷ் குமார்) வெளியேறினார். அவர் நம்மிடம் இருந்து பறித்துக்கொள்ளப்பட்டுள்ளார். தற்போதுள்ள மத்திய அரசு, ஒவ்வொரு தலைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக சிலர் நட்பை கைவிடுகிறார்கள். சிலர் கூட்டணியை கைவிடுகிறார்கள். கட்சிகள் அச்சத்தில் இருக்கின்றன. இதுபோன்ற கோழைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பு உயிர்ப்போடு இருக்குமா?

உண்மையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்தான் மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பு. அதன்பிறகு வாக்களிப்பும் இருக்காது; தேர்தலும் இருக்காது. ரஷ்ய அதிபராக விளாதிமிர் புடினை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலைப் போன்றுதான் இங்கு தேர்தல் இருக்கும். அவர்கள்(பாஜக) அதிகாரத்தைக் குவித்துக்கொண்டு மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வருவார்கள். 200 இடங்கள், 300 இடங்கள், 400 இடங்கள் ஏன் 600 இடங்களுக்கும் அதிகமாகக் கூட அவர்கள் வெற்றி பெறுவார்கள். எனவே, அரசியல் சாசனத்தையும், தொடர்ந்து தேர்ல்கள் நடப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது. நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதும் மக்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் விரும்பினால் ஜனநாயகம் இருக்கும். ஒருவேளை நீங்கள் சர்வாதிகாரத்தை விரும்பினால் அது உங்கள் விருப்பம்.

முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் மக்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள். ஆனால், நரேந்திர மோடியோ மக்களின் உயிரை பறித்து வருகிறார். ஒரு அரசியல் தலைவர் மோடியின் பேச்சை கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுபோன்ற பயங்கரவாத அணுகுமுறையின் மூலம் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்து அன்புடன் அரசாங்கத்தை நிர்வகித்தோம். கல்வி, சுகாதாரம், தொழில் துறையில் முன்னேற்றம், உயர் நிறுவனங்களை நிறுவுதல் ஆகியவை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தன. தற்போதைய அரசாங்கம், மக்களிடையே முரண்பாடுகளையும் மோதலையும் ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி காண்பதாக தெரிகிறது. இண்டியா கூட்டணியை விட்டு ஒருவர் செல்வதால் கூட்டணி பலவீனமடையாது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு பலவீனமடையுமா? அதைப்போலத்தான் இதுவும். ஒருவரோ இருவரோ வெளியேறுவதால் கூட்டணி பலவீனமடையாது. இன்னும் வலிமையாக நாம் உருவெடுப்போம். இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE