“உங்களுடன் போட்டியிடுங்கள்; மற்றவர்களுடன் அல்ல” - தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்; மற்றவர்களுடன் அல்ல என்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று (ஜன.29) நடைபெற்றது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நாட்டின் பல பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிரபரப்பப்பட்டது. அவற்றில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தங்கள் பிள்ளைகளின் ரிப்போர்ட் கார்டை (மதிப்பெண் அட்டை), அவர்களின் விசிட்டிங் கார்டு என பெற்றோர்கள் கருதக் கூடாது. தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது அவர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்துவிடும்.

மாணவர்கள் தங்களிடமே தாங்கள் போட்டியிட வேண்டும்; மற்றவர்களுடன் அல்ல. மாணவர்கள் மூன்று விதமான அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒன்று, சக மாணவர்கள் மூலமாக ஏற்படுவது. இரண்டாவது, பெற்றோர் மூலமாக ஏற்படுவது. மூன்றாவது, சுயமாக ஏற்படுவது. தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், மாணவர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள். தேர்வுக்குத் தயாராகும்போது சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் தேர்வுக்கு முன்பே நீங்கள் முழுமையாக தயாராகிவிடுவீர்கள்.

இன்று நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 7-வது ஆண்டு நிகழ்ச்சி. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர்கள் எதிர்கொண்ட அதே காலகட்டத்தைத்தான் நீங்கள் தற்போது எதிர்கொள்கிறீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் உங்களால் இலக்கை அடைய முடியும். இன்றைய மாணவர்கள்தான் நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போகிறவர்கள். இன்றைய மாணவர்கள் முன் எப்போதையும்விட புதுமைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இந்த ஆண்டு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2.26 கோடி பேர் பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE