பண மோசடி வழக்கு: ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை @டெல்லி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 9 சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்தது. சுரங்கங்களின் உரிமையை சட்டவிரோதமாக மாற்றும் மிகப்பெரிய மோசடி ஜார்க்கண்டில் நடப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இதுவரை, ஜார்க்கண்ட் சமூகநலத்துறை இயக்குநராகவும், ராஞ்சியின் ஆணையராகவும பணியாற்றிய 2011ம் வருட பேச்ட் ஐஏஎஸ் அதிகாரியான சாவி ராஜன் உட்பட 14 பேரை அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 20ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரணை நடத்தியது. எனினும், விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 9வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஜனவரி 27-ம் தேதி 9-வது சம்மனை அனுப்பியது.

அதன்படி, ஜனவரி 27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை இரவு டெல்லி வந்திருந்தார் ஹேமந்த் சோரன். இதையடுத்தே தற்போது டெல்லி இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE