முதல்வராக 9-வது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. முதல்வராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தளம், பாஜக ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

கடந்த 2022 ஆகஸ்டில் பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார். நிதிஷ்குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘இண்டியா’ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகித்தது. இந்த சூழலில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.

128 எம்எல்ஏக்கள் ஆதரவு: பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நிதிஷ்குமார் வீட்டில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் 45 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். இதேபோல, பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் 78 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பாஜகவின் 78 எம்எல்ஏக்களும், முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம்மோர்ச்சாவின் 4 எம்எல்ஏக்களும் நிதிஷ்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது இரு கட்சிகளின் சார்பில் அவரிடம் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது.

பிற்பகல் 1.30 மணி அளவில் ஆளுநர்ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதலில் ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவின் 78, ஐக்கிய ஜனதா தளத்தின் 45, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4, ஒரு சுயேச்சை என 128 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், ஆட்சிஅமைக்க அழைப்பு விடுத்தார். நேற்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிஹார் முதல்வராக, 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பாஜகவை சேர்ந்த பிரேம் குமார், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த விஜய்குமார் சவுத்ரி, விஜேந்திர பிரசாத் யாதவ், ஷிரவண் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜிதன்ராம் மாஞ்சியின் மகனும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் மூத்ததலைவருமான சந்தோஷ் குமார் சுமன்,சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்இன்று காலை 11.30 மணி அளவில் நடக்க உள்ளது. இதில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து: இந்நிலையில், நிதிஷ்குமாரை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு விழா முடிந்த பிறகு, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. வளர்ச்சிபாதையில் மாநிலம் அதிவேகமாக முன்னேறும். பிஹார் மாநில மக்களின் லட்சியங்கள் நிறைவேற்றப்படும். புதிய முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹாவை வாழ்த்துகிறேன். பிஹார் மக்களை முன்னேற்ற இந்த புதிய அணி முழு அர்ப்பணிப்போடு செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

புதிய துணை முதல்வர்கள் யார்? துணை முதல்வர் ஆகியுள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி (55), பிஹாரின் முங்கர் பகுதி லகான்பூர் கிராமத்தை சேர்ந்தவர். பிஹாரில் பள்ளி, கல்லூரி படித்த இவர்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி திட்டத்தில் உயர் கல்வியை நிறைவு செய்தார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளில் இருந்த சவுத்ரி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் பிஹார் மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்னொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய்குமார் சின்ஹா, தொடக்கம் முதல் பாஜகவில் இருந்து வருகிறார். சட்டப்பேரவை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்