புதுடெல்லி: ராமரின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் (2024) முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: "எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுத காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75-வது குடியரசு நாளை கோலாகலத்தோடு கொண்டாடினோம். இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டும் கூட, உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன.
பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் 3-வது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. 3-வது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். ராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22-ம் தேதியன்று, அயோத்தியில் நான் “தெய்வம் முதல் தேசம் வரை” என்று பேசியிருந்தேன், “ராமன் முதல் நாடு வரை” என்றும் கூறியிருந்தேன்.
நண்பர்களே, அயோத்தியில் பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓர் இழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் ராமன், அனைவரின் இதயங்களிலும் ராமன். தேசத்தில் பலர் இந்த வேளையில் ராம பஜனைகளைப் பாடி, அவற்றை ராமனின் பாதார விந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி 22-ம் தேதியன்று மாலையில், நாடெங்கிலும் ராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத் தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உள்ள உறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமுமாகும்.
» பாஜக தலைவர்களோடு சென்று ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார் - இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்பு
» “சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் இல்லை” - கேரள ஆளுநர் மீது முதல்வர் பினராயி விஜயன் சாடல்
தூய்மை தடைபடக்கூடாது: மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22-ம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டேன். லட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள். இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.
கவனம் பெற்ற பெண்கள் சக்தி: என் அருமையான நாட்டுமக்களே, இந்த முறை ஜனவரி 26-ம் தேதியன்று நடைபெற்ற அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது; ஆனால் மிக அதிக அளவு விவாதப் பொருளானது என்னவோ, அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் சக்தி தான். கடமைப் பாதையில், மத்திய பாதுகாப்புப் படையினர், டெல்லி போலீஸாருடைய பெண்கள் பிரிவு, அணிவகுப்பைத் தொடங்கிய போது, அனைவரும் பெருமிதம் அடைந்தார்கள். பெண்களின் பேண்டு வாத்தியத்தின் அணிவகுப்பு, அவர்களின் அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பார்த்த போது, நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ளோர் வியந்து போனார்கள். இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன.
இடம்பெற்றக் காட்சி ஊர்திகள் அனைத்திலும் பெண் கலைஞர்களே இருந்ததையும் காண முடிந்தது. நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கூட, கிட்டத்தட்ட 1,500 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். பல பெண் கலைஞர்கள், சங்கு, நாதஸ்வரம் மற்றும் நாகதா போன்ற பாரதீய இசை வாத்தியங்களை வாசித்து வந்தார்கள். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான DRDO-வின் காட்சி ஊர்தி வந்த போது, அதுவும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. எப்படி பெண்சக்தியானது நிலம்-நீர்-வானம், இணையம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்பது இதிலே வெளிப்படுத்தப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் பாரதம், இப்படிப்பட்ட பெண்கள் வழிகாட்டும் முன்னேற்றம் என்ற மந்திரத்தோடு கூட முன்னேறி வருகிறது.
பாரதின் பெருமை காத்த வீராங்கனைகள்: நண்பர்களே, அர்ஜுனா விருதுகள் வழங்கும் விழாவினை நீங்கள் சில நாட்கள் முன்னர் பார்த்திருப்பீர்கள். குடியரசுத் தலைவரின் மாளிகையிலே, தேசத்தின் பல திறமையான விளையாட்டு வீரர்களும், தடகள வீரர்களும் இதிலே கவுரவிக்கப்பட்டார்கள். இங்கேயும் கூட மக்களின் கவனத்தை நன்றாக கவர்ந்த விஷயம் என்றால், அது அர்ஜுனா விருதுகளைப் பெறும் பெண்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தான். இந்த முறை 13 பெண் தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜுனா பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தப் பெண் வீராங்கனைகள், பல பெரிய பந்தயங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள், பாரதத்தின் கொடியை அங்கே பறக்க விட்டிருக்கிறார்கள். உடல் ரீதியான, பொருளாதாரச் சவால்கள் ஆகியவை எல்லாம், இந்த சாகஸம் படைத்த, திறமை வாய்ந்த வீராங்கனைகளின் முன்னே தாக்குப் பிடிக்க முடியவில்லை.
மாறிவரும் பாரதத்தில், அனைத்துத் துறைகளிலும் நமது சிறுமிகள், பெண்கள் அற்புதங்களை வெளிப்படுத்தி வருகிறர்கள். மேலும் ஒரு துறை உண்டு, அதிலே பெண்கள் தங்களின் அடையாளத்தைப் பொறித்திருக்கிறார்கள் என்றால் அது சுய உதவிக் குழுக்கள். இன்று பெண்கள் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை தேசத்திலே அதிகரித்திருக்கிறது, அவர்களுடைய பணியாற்றும் எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. கிராமங்கள்தோறும் வயல்களிலே, நமோ ட்ரோன் சகோதரிகள், ட்ரோன் வாயிலாக, வேளாண்மையில் உதவி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சுய உதவி குழுக்களின் வளர்ச்சி: உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில், அங்கே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தயாரிக்கும் பெண்களைப் பற்றித் தெரிய வந்தது. சுயவுதவிக் குழுக்களோடு இணைந்த நிபியா பேகம்புர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் பசும்சாணம், வேப்பிலைகள், பலவகையான மருத்துவத் தாவரங்களைக் கலந்து, உயிரி உரத்தைத் தயார் செய்கிறார்கள். இதைப் போலவே இந்தப் பெண்கள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவைகளைப் பசை போல அரைத்து, உயிரி பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் இணைந்து ‘உன்னதி ஜைவிக் இகாயி’, அதாவது ‘உன்னதி உயிரி அலகு’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
உயிரிப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தப் பெண்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கிறது. இதன் வாயிலாகத் தயாரிக்கப்படும் உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று, அருகில் இருக்கும் கிராமங்களில் 6,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இவர்களிடமிருந்து உயிரிப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக சுய உதவிக்குழுவோடு தொடர்புடைய இந்தப் பெண்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது, அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு கண்டிருக்கிறது.
நண்பர்களே, கடந்த ஒரு தசாப்தத்தில், பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது. பத்ம விருதுகளை அளிக்கும் முறையில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் இப்போது தங்களைத் தாங்களே முன்னிறுத்தும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தான், 2014-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த முறை 28 மடங்கு அதிக நியமனங்கள் கிடைத்திருக்கின்றன. பத்ம விருதுகளின் பெருமை, நம்பகத் தன்மை, அதன் மீதான நன்மதிப்பு ஒவ்வொர் ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பது நமக்கு விளங்குகிறது. பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு இலக்கு உள்ளது, ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை நிறைவு செய்யவே பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. இதன் காரணமாக மக்கள் முழுமையான அர்ப்பணிப்போடு தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். சிலர் சமூக சேவை வாயிலாக, சிலர் ராணுவத்தில் சேர்வது மூலம், சிலரோ அடுத்த தலைமுறைக்குக் கல்வி கற்பிப்பதன் வாயிலாக என்று தங்கள் கடமைகளின்படி செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் இறுதிக்குப் பிறகும் கூட, சமூக வாழ்க்கையின்பால் தங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்றும் சிலரும் கூட நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் கண்டிருக்கும் வழிதான் உடலுறுப்பு தானம். தற்காலத்தில் நாட்டில் ஓராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் மரணத்திற்குப் பிறகு தங்களின் உடலுறுப்புக்களைத் தானமாக அளித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தீர்மானம் எளிதானது அல்ல. ஆனால் இந்தத் தீர்மானம் பலரது உயிர்களைக் காக்கவல்லது.
தங்களுடைய நெருங்கிய சொந்தங்களின் இறுதி ஆசைக்கு மதிப்பளித்த அத்தகையோரின் குடும்பங்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்திலே பல அமைப்புகள் இந்த திசையிலே பல உத்வேகமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சில அமைப்புகள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் அதே வேளையில், சில அமைப்புகள் உறுப்பு தானம் செய்ய விருப்பமுடையோரைப் பதிவு செய்வதில் உதவிகரமாகச் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளால் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் தேசத்தில் உருவாகி வருகிறது, மக்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இன்று விளையாட்டு உலகிலேயும் கூட பாரதம் தினம்தினம் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. விளையாட்டுலகில் முன்னேறிச் செல்ல, விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், தேசத்தில் நிறைய விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது அவசியமானது. இந்த எண்ணத்தோடு கூடவே இன்று பாரதத்தில் புதியபுதிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் சென்னையில் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதிலே தேசத்தின் 5,000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள். இன்று பாரதத்தில் தொடர்ந்து இப்படிப்பட்ட புதிய தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன, இவை காரணமாக விளையாட்டு வீரர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
கடற்கரை விளையாட்டுக்கள் இதே போன்றதொரு தளமாக ஆகியிருக்கிறது. தீவ் தீவிலே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவ் தீவு, மத்திய யூனியன் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள், சோமநாத்துக்கு மிக அருகிலே இது இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தீவில் இந்தக் கடற்கரை விளையாட்டுக்கள் தொடக்கி வைக்கப்பட்டன. இது பாரதத்தின் முதல் பல்விளையாட்டு கடற்கரை விளையாட்டுக்களாகும். இவற்றிலே டக் ஆஃப் வார், கடல் நீச்சல், பென்காக்சிலாட், மல்லகம்பம், பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்தாட்டம், பீச் குத்துச்சண்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றிலே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது, கடல் பகுதிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கூட இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களை மத்தியப் பிரதேசம் வென்றது, இங்கே கடற்கரை என்பதே கிடையாது. விளையாட்டுக்களின்பால் இந்தக் கண்ணோட்டம், எந்த ஒரு தேசத்தையும், விளையாட்டுக்களின் உலகின் மகுடமணியாக ஆக்கவல்லது.
நண்பர்களே, நாளை 29-ம் தேதியன்று காலையில் பரீக்ஷா பே சர்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்வின் 7-வது பகுதியாகும் இது. அனைவரும் எப்போதும் ஆவலோடு காத்திருந்து கேட்கும் வகையிலான நிகழ்ச்சி இது. இதனால் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது, அவர்களுடைய தேர்வுகள் தொடர்பான மன அழுத்ததைக் குறைக்கும் முயற்சிகளில் நான் ஈடுபடுகிறேன். கடந்த ஏழாண்டுகளிலே, பரீக்ஷா பே சர்ச்சா, கல்வி மற்றும் தேர்வுகளோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் குறித்து உரையாட ஒரு மிகச் சிறந்த ஊடகமாகி இருக்கிறது.
இந்த முறை இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இதிலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் உள்ளீடுகளையும் அளித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் முதன்முறையாக 2018-ல் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிய வேளையில் இந்த எண்ணிக்கை வெறும் 22,000 ஆக இருந்தது. மாணவச் செல்வங்களுக்கு உத்வேகம் அளிக்கவும், தேர்வுகளின் அழுத்தங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்பவும், பல நூதனமான முயற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
நாளை சாதனைப் பதிவேற்படுத்தும் எண்ணிக்கையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில், மாணவச் செல்வங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களோடு கலந்து பேசுவது எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்தச் சொற்களோடு நான் மனதின் குரலின் இந்தப் பதிப்பினை நிறைவு செய்கிறேன், உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். விரைவிலேயே நாம் மீண்டும் சந்திப்போம். நன்றிகள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago