பாட்னா: பிஹார் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக அம்மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிஹார் முதல்வர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இண்டியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இண்டியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்" என தெரிவித்தார்.
இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சவுத்ரி, "பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்வில் வரலாற்றுத் தருணத்தை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அரசில் பங்கு வகிக்க இருப்பதும் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கானது. லாலு யாதவின் பயங்கரவாதத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிஹாரில் காட்டாட்சி இருக்ககூடாது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது" என கூறினார்.
இதனையடுத்துப் பேசிய கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக இருந்து தற்போது துணைத் தலைவராக மாறி இருக்கும் விஜய் குமார் சின்ஹா, கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். பிஹாரில் நடைபெற்று வரும் இந்த மாற்றங்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து புதிய அரசு அமைக்க உள்ளதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
» முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் - நிதிஷ் குமார் அறிவிப்பு
» “விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” - தெலங்கானா முதல்வர் உறுதி
கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ் குமார் விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரது முயற்சியில் இண்டியா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார்.
இதற்கு லாலு மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், திடீரென குறுக்கிட்ட ராகுல் காந்தி, இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கேட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதனால் கோபம் அடைந்த நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றார். தொடர்ந்து, இண்டியா கூட்டணி தலைவர்கள், மம்தா, அர்விந்த் கேஜ்ரிவால், லாலு ஆகிய தலைவர்களை நிதிஷ் குமார் சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில், பிஹாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் பிஹாரில் மக்கள் தலைவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் இருப்பதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினர். இதனால் பாஜக ஆதரவுடன், பிஹாரில் புதிய ஆட்சியை அமைக்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். தனது அமைச்சரவையில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களை மாற்றிவிட்டு பாஜக எம்எல்ஏக்களை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பிஹாரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, ‘‘அரசியலில் எந்த கதவும் மூடப்படுவதில்லை. தேவைப்பட்டால் திறக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago