விலங்குகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க உ.பி.யில் ‘வன நண்பர்கள்’ திட்டம் அறிமுகம்: பல்ராம்பூர் வன அதிகாரி செம்மாறனுக்கு மக்கள் பாராட்டு

By ஆர்.ஷபிமுன்னா

பல்ராம்பூர்: கிழக்கு உ.பி.யில் அயோத்தியை அடுத்துள்ள மாவட்டம் பல்ராம்பூர். இது, நேபாள எல்லையில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் சுகல்தேவ் வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இதில் உள்ள புலி, சிறுத்தை, கழுதைப் புலி, கரடி, நரி உள்ளிட்டவிலங்குகள் பல நேரங்களில் திசைமாறி அல்லது கால்நடைகளை வேட்டையாட அருகில் உள்ள கிராமங்களில் நுழைகின்றன.

பல்ராம்பூர் மாவட்ட வன அதிகாரியாக வேதாரண்யத்தை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி எம்.செம்மாறன் பணியாற்றி வருகிறார். பல்ராம்பூரின் துளசிபூர் வனப்பகுதி கிராமங்களில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் சிறுத்தை தாக்கியதில் 6 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கவலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் செம்மாறன் தலைமையிலான வனக் காவலர்கள் பிரச்சினைக்குரிய 3 சிறுத்தைகளையும் பிடித்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் எம்.செம்மாறன் கூறும்போது, ‘‘உ.பி.யில் சராய் எனப்படும் இமயமலை அடிவாரப் பகுதியில் சிறுத்தைகள் அதிகம் உள்ளன. ஏழு சரகங்களுடன் சுகல்தேவ் சரணாலயத்தை புலிகளின் சரணாலயமாக்கும் திட்டம்மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இச்சூழலில் சிறுத்தை, புலிகளின் தாக்குதலுக்கு முடிவுகட்ட வன நண்பர்கள் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இளைஞர்களை தேர்வுசெய்து பயிற்சி அளிக்கிறோம். விலங்குகளின் நடமாட்டத்தை அதன் காலடித்தடம் மூலம் கண்டறிவது, விலங்குகளிடம் இருந்து காத்துக் கொண்டு மக்களையும் காப்பது என இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது” என்றார்.

பல்ராம்பூரை ஒட்டியுள்ள நேபாளப் பகுதியிலும் வனப்பகுதி உள்ளது. இதிலும் சிறுத்தைகள் அதிகம் இருப்பதால் அங்கு பான்கே தேசிய சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்தும் சிறுத்தைகள், பல்ராம்பூரின் வனப்பகுதியில் புகுந்து விடுவது உண்டு. இதன் காரணமாக அதிகாரி செம்மாறனின் வன நண்பர்கள் திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உ.பி.யில் துத்துவா, பிலிபித் மற்றும் அமான்கரில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இதுபோன்ற வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஏற்கெனவே பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்ட வன நண்பர்களை பாராட்டி, நேற்று முன்தினம் குடியரசு தினத்தில் 15 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றை அதிகாரி செம்மாறன் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE