பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிரடி திருப்பம் காரணமாக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் நாளை (ஜன.28) 9-வது தடவையாக முதல்வராக பதவி ஏற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை நிதிஷ் குமார் தனது பழைய கூட்டாளியான பாஜகவின் ஆதரவுடன் முதல்வராகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை உருவாக்கி பிஹாரின் முதல்வராக 8வது முறையாக பதவி ஏற்றார். இந்த நிலையில் நிதிஷ் குமார் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்ததை அடுத்து, லாலு பிரசாத் யாதவின் மகள், நிதிஷ் குமாரை விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பிஹாரில் ஆட்சியில் உள்ள மகாகட்பந்தன் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது பிஹார் அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பில் அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் சனிக்கிழமை கூட்டம் நடத்தின.
பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் அதிகாரப்பூர்வமான இல்லத்தில் ஆர்டிஜே எம்எல்ஏக்களுடன் சந்திப்பு நிகழ்த்தினார். இதுகுறித்து எந்த விதமான முடிவையும் எடுக்கும் உரிமை கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் கூட்டத்துக்குச் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி தலைவர்கள், "இது வழக்கமான சந்திப்புதான், மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தங்களுக்கு தெரியாது" என்று தெரிவித்தனர்.
தற்போதைய மாநில அரசு குறித்து ஊடகங்களில் எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என எம்எல்ஏகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டராங்கள் தெரிவித்தன. மேலும் பெயர் வெளியிட விரும்பாத கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த அரசியல் சூழலை ஆர்ஜேடி பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நிதிஷ் குமார் தான் ஆர்ஜேடியிடமிருந்து பிரிந்தார். நாங்கள் இல்லை. நாளைய தினம் அரசு மாறலாம்" என்று தெரிவித்தார். நிதிஷ் குமார் அரசில் இருந்த ஆர்ஜேடி அமைச்சர்கள் அனைவரும் தங்களின் அரசு வாகனங்களை திரும்ப ஒப்படைந்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாகத்பந்தன் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ், ஜனவரி 30-ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை வந்தடையும் பூர்ணியாவில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியது. அங்கு ராகுல் காந்தி ஒரு கூட்டம் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, "காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிதிஷ் குமாருடன் பேச முயற்சி செய்தார். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கல்புர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி, என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி, பிஹார் மாநிலத்துக்கான மூத்த பார்வையாளராக சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலை நியமித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் நிதிஷ்குமாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற வதந்தியை மறுத்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஷகீல் அகமது கான், எங்களுடைய எம்எல்ஏக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் கொந்தளிப்பின் சூத்திரதாரியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தலைநகரில் கூட்டம் நடத்தியது. கட்சியின் முக்கிய உறுப்பினர்களான, அசோக் சவுத்ரி, விஜய் சவுத்ரி, சஞ்சய் ஜா(நிதிஷ்குமார் அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும்) கட்சியின் எம்பி, ராஜீவ் ராஜன் சிங் என்ற லாலன் சிங், ஆகியோர் நிதிஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லமான அன்னே மார்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே நிதிஷ் குமார் மீண்டும் கைகோக்க உள்ள பாஜகவின் முக்கியத் தலைவர்களும் பாட்னாவிலுள்ள ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். கட்சியின் மாநில பொறுப்பாளர் வினோத் தவ்டே, மாநில பாஜக மூத்த தலைவர்கள், சுஷில் குமார் மோடி, கிரிராஜ் சிங், மங்கல் பாண்டே, நித்யானந்த் ராய், மாநில பாஜக தலைவர் ஸ்மாரத் சவுத்ரி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மீண்டும் துணை முதல்வராகும் சுஷில் குமார் மோடி: ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நிதிஷ் குமார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்கலாம். அப்போகு மாநிலங்களவை உறுப்பினரும், மாநில பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, துணை முதல்வராக பதவி ஏற்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய என்டிஏ கூட்டணி அரசில் சுஷில் குமார் மோடி துணைமுதல்வராக இருந்தார் என்பதும், அவர் நிதிஷுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்றால், கடந்த 2005ம் ஆண்டிலிருந்து 9வது முறையாகவும், 2020ம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது முறையாகவும் அவர் முதல்வராக பதவி ஏற்றவராவார்.
நிதிஷ் குமார் நாளை காலை 10 மணிக்கு கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நாளை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கலாம். பின்னர் மாலை பதவி ஏற்பு நிகழ்வுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏகள் நிதிஷ் குமார் தலைமையில் ராஜ்பவனுக்கு செல்வார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், "எங்களுடையத் தலைவர் லாலு பிரசாத் யாதவைப் போல இல்லாமல் 2025க்கு பின்னர் உள்ள தனது அரசியல் வாழ்க்கையை அமைதியாக கழிக்க நிதிஷ் குமார் விரும்பியிருக்கலாம். லாலு ஏதாவது ஒரு வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்புகளால் தொடந்து விசாரணையை சந்தித்து வருகிறார்" என்றார். அரசியல் விமர்சகர் அஜய் குமார் கூறுகையில், "இதை இரண்டு விதமாக பார்க்கலாம். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்கும் பாஜகவின் நோக்கத்துக்கு நிதிஷ் குமாரின் உதவி பாஜகவுக்குத் தேவைப்படுகிறது. பிஹாரில் பாஜகவின் திட்டத்துக்கு நிதிஷ் முக்கிய பங்காற்ற முடியும். 2025ம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மீதமுள்ள தனது அரசியல் வாழ்க்கையை நிதிஷ் குமார் பிரச்சினை இல்லாமல் கழிக்கவிரும்பி இருக்கலாம். இந்த காலத்தில் அரசியலில் பொது நோக்கத்தை விட சுயநலமே மிகுந்திருக்கிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago