‘மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகள் ஏற்பு வெறும் கண்துடைப்பு’: மகாராஷ்டிர அமைச்சர் சாடல்

By செய்திப்பிரிவு

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகளை மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே அரசு ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அதன் கூட்டணிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் இந்த முடிவு வெறும் கண்துடைப்பு என்று கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் சாகன் புஜ்பால் விமர்சித்துள்ளார்.

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward - SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி சமூக நல செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் நவி மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டதால் அவர் தனது உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக சனிக்கிழமை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆசாத் மைதானத்துக்குச் சென்ற மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மனோஜ் ஜராங்கேவை சந்தித்து பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

இந்தநிலையில் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகளை ஏக்நாத் ஷிண்டே அரசு ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அரசின் கூட்டணிக்குள் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த (அஜித் பவார் அணி) அமைச்சரும், ஓபிசி தலைவருமான சாகன் புஜ்பால், "இந்த முடிவை சட்டப்பூர்வமாக ஆய்வுக்குட்படுத்தும் போது அது தோற்றுப்போகும். இது வெறும் கண்துடைப்பு தான். மராத்தாக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள், ஓபிசிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. இது ஒரு வரைவு ஆவணம் மட்டுமே. பிப்.16-ம் தேதி வரை கருத்துக்களும் எதிர்வினைகளும் கேட்கப்படும், அதன் பின்னர் அரசு அதன் மீது முடிவெடுக்கும். அதனைத் தொடர்ந்து, அரசின் முடிவினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்று நாங்கள் முடிவெடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

நான்கு மாத போராட்டம்: முன்னதாக, மராத்தா இடஒதுக்கீடு கோரிய சமூக செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், "மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகதான் இந்தப் போராட்டம். நாம் இங்கு வந்திருப்பது 54 லட்சம் குன்பி சான்றிதழ் பெறுவதற்காக தான். குன்பி சான்றிதழ் வழங்கும் பணியை அரசு விரைவில் தொடங்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக நாம் இதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். எனது தலைமுறையினர் இந்த இடஒதுக்கீடுக்காக போராடுகிறார்கள். 300க்கும் அதிகமானவர்கள் இதற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். மராத்தாக்களுக்கும் ஓபிசிகளுக்கும் இடையில் எந்த ஒரு பிளவையும் நாம்மால் அனுமதிக்க முடியாது. ஆனால் நமக்குள் பிளவினை உருவாக்க முயல்கிறார்கள். இனி அது ஒருபோதும் நடக்காது. மராத்தாக்களுக்கும், ஓபிசிகளுக்கும் இடையில் நிறைய நேசம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றே" என்று தெரிவித்தார். மேலும் அவர், அரசாங்கத்தின் முடிவு தவறாகச் சென்றால், நான் மீண்டும் ஆசாத் மைதானத்துக்கு திரும்புவேன் என்றவர், அரசின் உத்தரவு சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஷிண்டே வாழ்த்து: போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவின் விடாமுயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. அதற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துக்கிறேன். நானும் ஒரு விவசாயினுடைய மகன் தான். அவர்களின் துன்பம் மற்றும் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். மேலும் நான் சொல்வதையே செய்வேன் என்று சத்ரபதி சிவாஜி மகாராஜா முன் சபதம் எடுத்துள்ளேன். எங்களுடைய அரசு சாமானிய மக்களுக்கானது. நாங்கள் மக்களின் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறோம். ஓட்டுக்களுக்காக ஒருபோதும் முடிவெடுப்பதில்லை. மராத்தா சமூகம் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் தேவைப்படும் போது அவர்கள் சமூகத்தின் பக்கம் நிற்கவில்லை" என்றார். ஷிண்டே தனது பேச்சில் மறைமுகமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE