ஆந்திரா: அடுத்தடுத்து பதவிகளைத் துறக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களால், நெருக்கடியைச் சந்தித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒருபுறம் உடன்பிறந்த அண்ணனையும், மறுபுறம் தெலுங்கு தேசம் கட்சியையும் தீவிரமாக விமர்சித்து அதிரடி காட்டி வருகிறார் ஷர்மிளா. ஆந்திர தேர்தல் களத்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள் என்ன?
ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த, நரசராவ்பேட்டா தொகுதி எம்.பி., ஸ்ரீ கிருஷ்ணா தேவராயிலு நேற்று தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், ‘கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளேன். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனது தொகுதியில் வேறொருவரை வேட்பாளராக நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. மேலும் கட்சியில் சில வேறுபாடுகளை உணர நேர்ந்தது. இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்து எடுத்துக் கூறினேன். எனினும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என்றார்.
கடந்த 10-ம் தேதி கர்னூல் தொகுதி எம்.பி. சஞ்சீவ் குமார், ‘கடந்த 4 ஆண்டுகளாக என் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை’ எனக் கூறி, தன் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 13-ம் தேதி, மச்சிலிப்பட்டினம் எம்.பி., வல்லபனேனி பாலசோவ்ரியும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததுடன், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸிலிருந்து விலகி, பவன் கல்யாணைச் சந்தித்து அவரது ஜனசேனா கட்சியில் இணைந்தார்.
‘ஓங்கோல் தொகுதி எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டியும் விரைவில் கட்சியில் இருந்து விலகலை அறிவிப்பார்’ என சொல்லப்படுகிறது. எம்.பி., பதவியைத் துறந்து, கட்சியிலிருந்து விலகியுள்ள மூன்று எம்.பி.,க்களுக்கும், மகுண்டா சீனிவாசலு ரெட்டிக்கும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ‘லிஸ்ட்’டில் இந்துப்பூர் எம்.பி., கோரன்ட்லா மாதவ், ஏலூர் எம்.பி., கோத்தகிரி ஸ்ரீதர், மச்சிலிப்பட்டினம் எம்.பி., வி.பாலசோவ்ரி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். தனது எம்.பி.,கள் பதவியைத் துறந்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதால் விழிபிதுங்கியிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
இரு துருவங்களையும் தாக்கும் ஷர்மிளா! நிலைகுலைந்துள்ள ஜெகன் மோகனை நேரடியாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் அவரது தங்கையும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஷர்மிளா, ‘‘என் அப்பா (ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி) உயிரோடு இருந்தவரை, பா.ஜ.க.வுக்கு எதிராக இருந்தார். ஆனால், இப்போது ஆந்திராவின் நிலையைப் பார்த்தால் கவலையாக உள்ளது. பா.ஜ.கட்சிக்கு ஆந்திராவில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. ஆனால், இங்குள்ள அரசு, பா.ஜ.க.வின் கைப்பாவையாக உள்ளது.
ஜெகன் மோகன் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து குறித்து, பா.ஜ.க.விடம் ஒருமுறை கூடப் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வரும். அதற்கான உறுதியை ராகுல் காந்தி அளித்துள்ளார்,’’ என, கடுமையாக ஜெகன் மோகனை விமர்சித்தவர், தலைநகர் விவகாரத்தில், ஜெகனுடன் சேர்த்து, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, “ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இருந்தும் ஆந்திராவுக்குச் சரியான தலைநகரம் இல்லை. சந்திரபாபு நாயுடு அமராவதி தலைநகரமாக உருவாக்க முயன்றார்; ஆனால் அது முடிக்கப்படவில்லை. ஜெகன் மோகன், மூன்று தலைநகரங்களை அறிவித்தாார். ஒன்றைக் கூட கட்டமைக்கவில்லை” என, ஆந்திர அரசியலின் இரு துருவங்களையும் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 13-ம் தேதி, ஷர்மிளா தன் மகனின் திருமணத்திற்கான அழைப்பிதழை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துக் கொடுத்தார். கூட்டணி இணக்கத்தால் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவில்லை. இதனால் அவரை நேரடியாகவே விமர்சிக்க தொடங்கியிருக்கிறார் ஷர்மிளா.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “ஒருங்கிணைந்த ஆந்திராவைப் பிரித்த கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நபர் ஒருவர், சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக, அந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்” என, மறைமுகமாக ஷர்மிளாவை சாடினார்.
பாஜக.வுக்கு ஆதரவாக ஜெகன் மோகன் ஆட்சி நடத்துவதாக காங்கிரஸ் மட்டுமின்றி தெலுங்கு தேச கட்சியும் விமர்சித்து வருகிறது. எனவே, ஜெகன்மோகனுக்கு எதிராக, இந்த இரு கட்சிகள் இணையுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஜெகன் மோகன் பாஜக.வுடன் நெருக்கமான போக்குடன் இருக்கிறார். கூட்டணி குறித்த அறிவிப்புகள் விரைவில் வரலாம். எனவே, ஆந்திர அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் பலமான கூட்டணியை யார் அமைப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago