நிதிஷ் குமார் அதிருப்திக்குக் காரணம் என்ன? - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விளக்கம்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தாததன் காரணமாகவே அவர் அதிருப்தி அடைந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்ததை அடுத்து, லாலு பிரசாத் யாதவின் மகள், நிதிஷ் குமாரை விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பிஹாரில் ஆட்சியில் உள்ள மகாகட்பந்தன் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. நிதிஷ் குமார் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்கத் தயாராக இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், “வரும் 2025-ல் பிஹாரில் பாஜக ஆட்சி அமைக்கும். இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். பிஹார் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் கவனித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் அதிருப்திக்குக் காரணம் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,“இதனை லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாருமே அறிவார்கள். ஆனால், ஒரு விஷயம் நிதிஷ் குமார் ஓர் அமைதியற்ற ஆத்மா. தற்போது அந்தக் கூட்டணியில் நடந்து கொண்டிருப்பதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது வரை கூட்டணி தொடர்பாக லாலு பிரசாத் யாதவோ, நிதிஷ் குமாரோ எதுவும் கூறவில்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி கருத்து கூற முடியும்? நாங்கள் இங்கே மிக முக்கியமான கட்சி. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், லாலு பிரசாத் யாதவ் அதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறார். அவர் ராகுல் காந்தியை ஆதரிக்கிறார்" என தெரிவித்தார்.

கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் வதந்தி காரணமாகவே அமைதியற்ற போக்கு ஏற்பட்டிருப்பதாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இவை எல்லாமே வதந்திகள்தான். வதந்திகள் காரணமாகவே அமைதியற்ற போக்கு எழுந்துள்ளது. நிதிஷ் குமார் இதுவரை எதையும் கூறவில்லை. எனவே, ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் எந்த மோதலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது என ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி தெரிவித்துள்ளார்.

“பிஹாரில் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் அரசு வலுவாக உள்ளது. இது தொடரும். அதேநேரத்தில், எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது யாருக்குத் தெரியும்? எங்கள் கட்சித் தலைவர்கள் அரசியலில் அவ்வாறு போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. மக்கள் நலனுக்காக பிஹார் அரசு பாடுபட்டு வருகிறது" என மிருத்யுஞ்சய் திவாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிஹாரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தற்போது ஏற்பட்டிருப்பது மிக முக்கியமான விஷயம். அது தொடர்பாக அமித் ஷா மற்றும் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் நான் பேசினேன். பிஹார் மீதான எனது கவலையை தெரிவித்தேன். பல்வேறு விஷயங்களில் அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். கூட்டணியைப் பொறுத்தவரை சாதகமாக உள்ளது. வரும் காலங்களில் பிஹார் சூழல் இன்னும் தெளிவாகும். அதன் பிறகு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். நாங்கள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE