“மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்” - பசவராஜ் பொம்மை நம்பிக்கை

By இரா.வினோத்


பெங்களூரு: வருகிற மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான‌ பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களின் மிகப்பெரிய ஆசையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். இதனால் ராமரின் ஆசிர்வாதம் மோடிக்கு கிடைத்துள்ளது. உலக நாடுகள் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது.

வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். தென்னிந்தியாவில் சற்று பின் தங்கியுள்ள பாஜக இந்த முறை அதிக இடங்களில் வெல்லும். தேர்தலுக்குப்பின் தென்னிந்தியாவில் இருந்து ஆச்சரியமான செய்திகள் வெளிவரும். குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் எதிர்ப்பார்ப்பை கடந்து அதிக இடங்களில் வெல்லும். பிரதமராக‌ மோடி மீண்டும் பதவியேற்பார்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE