“இண்டியா கூட்டணியுடன் இருந்திருந்தால் நிதிஷ் குமார் பிரதமர் ஆகியிருக்கலாம்” - அகிலேஷ் யாதவ் கருத்து

By செய்திப்பிரிவு

லக்னோ: எதிர்க்கட்சிகள் கூட்டணியான இண்டியா கூட்டணியுடன் வலுவாக நின்றிருந்தால் நிதிஷ் குமார் பிரதமராகியிருக்கலாம் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது. மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை, இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து பிஹாரில் ஆட்சி நடத்தவும் நிதிஷ் குமார் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் கூட்டணி மாறி புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறு.

இண்டியா கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது நிதிஷ் குமாரின் இந்த மாற்றம். இதனிடையே. நிதிஷ் குமாரின் மாற்றம் குறித்து பேசியுள்ள உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “இண்டியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம். ஆனால், நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியில் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இண்டியா கூட்டணியை முயற்சி எடுத்து உருவாக்கியது நிதிஷ் குமாரே. இண்டியா கூட்டணியுடன் வலுவாக நின்றிருந்தால் நிதிஷ் குமார் பிரதமராகியிருக்கலாம்.

காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். இனியாவது ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் சமாதானமாக செல்ல வேண்டும். ராகுல் காந்தியுடன் இணைந்து லோக் சபா தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வது குறித்து காலம் தான் பதில் சொல்லும். பிரதமர் பதவிக்கு நான் போட்டிபோடவில்லை. ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது. அதில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது” இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE