‘இண்டியா’ கூட்டணியில் இருந்து விலகுகிறார் - பாஜக கூட்டணிக்கு வருகிறார் நிதிஷ் குமார்?

By செய்திப்பிரிவு

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது.மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை,இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து பிஹாரில் ஆட்சி நடத்தவும் நிதிஷ் குமார் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் கூட்டணி மாறி புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறு.

ஏற்கனவே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வந்தார். 2022-ம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பிஹாரில் ஆட்சியமைத்தார்.

மேலும், இண்டியா கூட்டணி உருவாக மிக முக்கிய காரணகர்த்தாவாகவும் இவரே இருந்தார். பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ், இண்டியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார்.

அதனால்தான் அவர் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டதும் நிதிஷ் அதிருப்தியடைந்தார்.

இதனுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஏற்கெனவே இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீடுக்கு ஒத்து வராமலிருக்கும் நிலையில், நிதிஷ் குமாரும் அதிருப்தியில் உள்ளார்.

இதற்கிடையே பிஹார் மாநில முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்த நிலையில், மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார். லாலுவின் இளைய மகன் துணை முதல்வராக உள்ளார். மற்றொருவர் அமைச்சராக உள்ளார். ஒரு மகள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் இவர்களை குறிவைத்துதான் நிதிஷ் குமார், வாரிசு அரசியல் பற்றி பேசினார் என செய்தி வெளியானது.

வெளிநாட்டில் வசித்து வரும் லாலுவின் மகள் இதனால் கோபம் அடைந்து நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப அந்த கருத்துகளை நீக்கினார். இது எல்லாம்தான் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ஆர்ஜேடி கட்சியை கழற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பிஹார் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலுடன் பாஜகவுடன் கைகோர்த்து பேரவைத் தேர்தலையும் நிதிஷ் குமார் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் ஒலித்து வருகிறது.

இந்தத் தகவல்கள் அனைத்துமே உறுதி செய்யப்பட்டால், வரும் வாரத்தில் பிஹாருக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது அதே மேடையில் நிதிஷ் குமாரும் தோன்ற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாஜக மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை வரவேற்க தயாராக இருக்கின்றனர். ஆனால், கட்சியின் உள்ளூர் தலைவர்கள் அவரை வரவேற்க தயாராக இல்லை. கூட்டணியில் இணைத்தாலும் அவருக்கு முதல்வர பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் கூட்டணியில் இணையப் போகும் நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE